நான் இப்ப ரொம்ப மாறிட்டேன் பாஸ்! – நடிகர் ஜெய் ஓப்பன் டாக் – AanthaiReporter.Com

நான் இப்ப ரொம்ப மாறிட்டேன் பாஸ்! – நடிகர் ஜெய் ஓப்பன் டாக்

நடிகர் ஜெய்.. வளர்ந்து வரும் நாயகர்களில் முக்கியமான ஒருவரான இவர் தான் நடிக்கும் படங்கள் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. இதனால் இவர் மனதில் தன்னை அஜித் என நினைத்துக்கொண்டிருக்கிறார் என பலரும் கோபமாக கேட்டும் அவர் திருந்தாமலேயே இருந்தார். ஆனால் தற்போது அவர் மனம் மாறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் “கூச்ச சுபாவம் காரணமாகவே நான் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தேன். ஆனால், தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு என்னை மாற்றிவிட்டார். இனிமேல் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன்” என ஜெய் கூறியுள்ளார்.

பத்திரிகை நிருபர்களை  கண்டால் முகத்தை திருப்பிக் கொண்டு போகும்  ஜெய் திடீரென நேற்று மிகச் சிலரை அழைத்து கேஷூவலாக பேசிக் கொண்டிருந்தார்..

அப்போதைய உரையாடல் இதோ:

நான் நடிச்சு முடிச்சு அடுத்து வர இருக்கும் படங்கள் எது-ன்னு கேட்டா நீயா 2, பார்ட்டி படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. அதே சமயம் மம்முட்டிக்கு தம்பியாக ஒரு மலையாள படத்தில் நடிக்கிறேன். மதுர ராஜா என்பது அப்படத்தின் பெயர். வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தில் வில்லத் தனம் கலந்த வேடம். அதற்கு அடுத்து கோபி நயினார் படம். இதில் வடசென்னையை சேர்ந்த கால்பந்து வீரராக நடிக்கிறேன்.

உங்கள் பலமே காதல் படங்கள் தான். அதை விட்டு விட்டு ஆக்‌ஷன் பாதைக்கு செல்வது ஏன்?

ஒரு மாற்றம் வேண்டும் என்று காதல் படங்களில் இருந்து மாறினேன். அதன் பிறகு காதல் படங்கள் அமையவில்லை.

இரண்டு கதாநாயகர்கள் படங்களில் அதிகம் நடிப்பது ஏன்?

இந்தி சினிமாவை போல் நடிகர்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் அறிமுகமானதில் இருந்தே அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகர்கள் படங்களில்தான் நடித்துள்ளேன்.

வாலு போன்ற சில ஹிட் படங்கள் கையைவிட்டு போனதில் வருத்தம் உண்டா?

இல்லை. அந்த படம் சிம்பு நடித்ததால் இந்த அளவுக்கு போனது. நான் நடித்து இருந்தால் எப்படி வந்து இருக்கும் என்று தெரியும்.

எந்த டைரக்டர் படத்தில் நடிக்க ஆசை?

கவுதம் மேனன், முருகதாஸ். சசிகுமார் சாருடன் இன்னொரு படம் பண்ணவும் ஆசை.

படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லையே, ஏன்?

எனது கூச்ச சுபாவம் தான் படங்களின் விளம்பர நிகழ்ச்சிக்கு வராமல் இருந்ததற்கான காரணம். இப்போது தயாரிப்பாளர் சுப்பு பஞ்சுதான் எனது மாற்றத்துக்கு காரணம். இனி படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவேன்.

சன்னி லியோனுடன் 2-வது படம் நடிக்கும் அனுபவம்? தொடர்பில் இருக்கிறீர்களா?

இதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். அவங்க ரொம்ப பிரெண்ட்லி. ட்விட்டரில் மட்டும்தான் தொடர்பில் இருக்கிறேன்.

காதல் அனுபவம்?

நிஜ வாழ்க்கையில் இதுவரை சீரியசான காதல் வரவில்லை. காதல் அமைந்தால் காதல் திருமணம் செய்வேன். இல்லாவிட்டால் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்கும். இப்போது திருமணம் செய்ய திட்டம் இல்லை.

உங்களுக்கு பிடித்த கதாநாயகி?

அப்படி யாரும் ஸ்பெ‌ஷலாக இல்லை. நயன்தாராவுடன் நடித்த போது மிகவும் வசதியாக உணர்ந்தேன். அவர் மிகவும் மென்மையானவர்.