கடவுளுக்கு அடுத்து காதல்தான் நம் சமூகத்தில் படு கேடாக புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தை! – AanthaiReporter.Com

கடவுளுக்கு அடுத்து காதல்தான் நம் சமூகத்தில் படு கேடாக புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தை!

நாளிதழ்களில் அபிராமி விஷயத்திற்கு தினமும் அரைப்பக்கம் ஒதுக்குகிறார்கள். இன்றைக்கு அபிராமி கள்ளக் காதலனோடு எப்படியெல்லாம் உல்லாசம் அனுபவித்தார் என்பதை 360° கோணத்தில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அபிராமி செய்து தவறு. ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் குழந்தைகள் மற்றும் கணவனை கொன்றுவிட்டு வா. நாம் சந்தோஷமாக வாழலாம் என மூளைச் சலவை செய்தது அவளின் கள்ளக் காதலன்.

அபிராமிக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் முடிந்திருக்கிறது. தற்போதைய வயது இருபத்தி ஐந்து. “இருபத்தைந்து வயது பெண்ணின் ஆசா பாசங்கள் என்னென்ன. பதின் பருவத்தில் குடும்ப வாழ்க்கைக்குள் நுழையும் பெண்களின் எதிர்பார்ப்பு என்னென்ன. நாட்கள் சலிக்கத் தொடங்கும் காலத்தில் குடும்பப் பெண்களின் மனநிலை எப்படியிருக்கும்! எந்தக் கருவியில் சிற்பம் வடித் தோமோ அந்தக் கருவியின் முனை மழுங்கும்போது பெண்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்” இது மாதிரி பெண்ணுலகம் சார்ந்த பல நூறு கேள்விகளால் மட்டுமே பெண்களை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். ஒரே பொட்டில் புரிந்துகொள்ள ஒரு வழியிருக்கிறது. ஆணும் பெண்ணும் சரீரத்துக்கு வெளியே வேறுவேறானவர்கள். மன அளவில் இருவரும் சமம். மாற்றுக் கருத்தே கூடாது.

அபிராமியை மட்டும் குற்றஞ் சாட்டும் மனங்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள். ஒரு தலைவன் தொண்டன் கரும்புலி தீவிரவாதி உளவாளி இத்யாதி இத்யாதி. இவர்களையெல்லாம் உருவாக் குவது வார்த்தைகள். உருக்கமும் உக்ரமும் சரிபாதி கலந்த இடைவிடாத வார்த்தைகள்.

உங்களிடம் இருக்கும் போராட்ட குணத்தை புரிந்துகொண்டு உங்களைத் தற்கொலை படையில் சேர்க்க முடியும். கொள்கைப் பற்று அதிகம் இருப்பவனைத் தேர்ந்தெடுத்து தீவிரவாதியாக மாற்ற முடியும். யாரையும் எப்படி வேண்டுமானாலும் உருமாற்றி நமக்குச் சாதகமாக வைத்துக் கொள்ளலாம். சூழலும் வார்த்தைகளும் மாத்ரம் போதும்.

அபிராமியின் கள்ளக் காதலன் வார்த்தைகளைக்கொண்டு விளையாடியிருக்கிறான். நல்லதற்குப் பதிலாக அல்லதை காதலென புகட்டியிருக்கிறான். “நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்” இப்படி காதலோடு சரணடைந்த இருபத்தைந்து வயது பெண்ணிடம் அவள் குடும்ப வாழ்க்கைக்கும் சேர்த்து சிந்தித்திருக்க வேண்டும். அவனே காதலன். இவன் மடையன். புத்திகெட்டவன். வழிநடத்த லாயக்கில்லாதவன். ஆனால் நல்ல மூளைச் சலவைக்காரன்.

கடவுளுக்கு அடுத்து காதல்தான் நம் சமூகத்தில் படு கேடாக புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தை. ஒருத்தியைக் காதலிக்கத் தொடங்கியதும் முதல் வேலையாக அவளின் நெருங்கிய உறவுகளை சிதறடிக்கிறார்கள். பின்னர் கொஞ்சங் கொஞ்சமாக சார்ந்து வாழும் வாழ்க்கை முறைக்குப் பழக்கப்படுத்துகிறார்கள். கணவன் இருந்தால் அவன் மிகச் சாதாரணமாக செய்யும் தவறுகளை பூதாகரமாக்கி அவனையே எதிரி களத்துக்கு அனுப்புகிறார்கள். முடிவில் சர்வமும் நாசம்.

பெண்ணைத் தக்க வைத்துக்கொள்ள மெனக்கிடுவது. பொஸஸிவ் மனநிலை. வேவு பார்ப்பது. பயத்துடன் நாட்களை நகர்த்துவது. என்நேரமும் உறவு சரியாக இருக்கிறதா எனக் குழப்பிக் கொள்வது. ப்ரைவசிக்குள் நுழைந்து கிண்டிப் பார்ப்பது. இதுவெல்லாம் காதலாக புரியப் பட்டிருக்கிறது சமூகத்தில். இந்த விஷம் தோய்ந்த குப்பை உணர்வுகளோடு காதலின் பாதையில் பயணப்பட்டு எதைச் சம்பாதிக்க முடியும்! அனுபவம் கூட அசைபோட உதவுமா!

சாம் நாதன்