”ஆவின் நிறுவனம் அழிந்து போகும்”. -பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை. – AanthaiReporter.Com

”ஆவின் நிறுவனம் அழிந்து போகும்”. -பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை.

சிங்கப்பூர் நாட்டில் முதல்முறையாக ஆவின் பால் விற்பனையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று துவக்கிவைத்தார். தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளதாக எழுந்த புகார், அதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கையாண்ட விதம் ஊடகத்தில் விவாத பொருளாக மாறியது. இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் தீர்ப்பையடுத்து தனியார் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் பால்தொடர்பாக எவ்வித கருத்தையும் அமைச்சர் தெரிவிக்கவில்லை.இந்நிலையில் ஆவின் பாலின் விற்பனையை விரிவுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக சொல்லப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் ஆவின் பால் விற்பனையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி இன்று துவக்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் வரும்காலங்களில் துபாய், கொழும்பு, உள்ளிட்ட நாடுகளிலும் ஆவின் பால் விற்பனையை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆவின் பாலில் எவ்வித கலப்படமும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் பால் முகவர்கள் சங்கம் சார்பில் அதன் நிறுவனர் பொன்னுசாமி வெளியிட்ட ஒரு அறிக்கையில் , ”

கடல் கடந்து சென்று பால் வணிகம் (டெட்ரா பேக்) செய்யும் முடிவை ஆவின் நிறுவனம் நவம்பர் 25ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு அமைப்பான தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ஆவின் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பதற்கு அந்நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் தினந்தோறும் தேவைப்படும் 100% பால் தேவையில் ஆவின் நிறுவனம் பூர்த்தி செய்வது வெறும் 16.4%மட்டுமே. மீதமுள்ள 83.6%தேவைகளை தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன. ஆக தமிழகத்திலேயே இன்னும் முழுமையான தேவைகளை பூர்த்தி செய்ய ஆவின் நிறுவனம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் விட்டு, விட்டு “இருப்பதை விடுத்து பறப்பதற்கு ஆசைபட்ட கதை” எனும் பழமொழியை ஞாபகப்படுத்தும் வகையில் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

ஏனெனில் தனியார் பால் நிறுவனங்களின் போட்டியை சமாளித்து ஆவின் பால் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்றால் அது பால் முகவர்களால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை நன்றாக உணர்ந்திருந்தும் பால் முகவர்களுக்கு நேரடியான வர்த்தக தொடர்புகளை தர மறுப்பதோடு, லிட்டருக்கு 1.50ஐ கமிஷனாக கொடுத்து விட்டு மொத்த விநியோகஸ்தர்கள், பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள் என அதனை மூவர் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்கிற தவறான நடைமுறைகளை கடந்த 17ஆண்டுகளாக தொடர்ந்து நடைமுறைபடுத்தி வருகிறது. இதனால் பால் முகவர்களுக்கு உழைப்பிற்கேற்ற வருமானம் ஆவின் பாலினை விற்பனை செய்யும் போது கிடைக்காததால் தனியார் பால் நிறுவனங்களின் பால் விற்பனைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதிருக்கிறது.

அதுமட்டுமன்றி ஆவின் பால் TM 18.50, SM 20.50, FCM 22.50 என ரெண்டுங் கெட்டானாக விற்பனை விலையை நிர்ணயம் செய்து வைத்துள்ளதால் அதிகபட்ச விற்பனை விலைக்குள் ஆவின் பாலினை விற்பனை செய்ய முடிவதில்லை. இதனால் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல ஆண்டுகளாக ஆவின் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும், தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அளித்தும் கடலில் தூக்கி வீசப்பட்ட கல்லாகவே கிடக்கிறது.

ஆவின் நிறுவனத்தில் அடிப்படையில் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்து தமிழகத்தின் தேவைகளில் 50% தேவைகளையாவது பூர்த்தி செய்தால் ஆவின் நிறுவனமும் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும். ஆவின் நிறுவனத்தை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைவர். மேலும் குளிர்சாதன அறைக்குள் அமர்ந்து கொண்டு திட்டம் தீட்டாமல் தனியார் பால் நிறுவனங்களின் அதிகாரிகள் போல் வணிக சந்தைக்கு இறங்கி வாருங்கள் என ஆவின் நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

ஆனால் அதை விடுத்து அடிப்படையில் ஆயிரம் ஓட்டைகளை வைத்துக் கொண்டு கடல் கடந்து சென்று பால் வணிகம் செய்யும் முயற்சியை ஆவின் நிறுவனம் தொடர்ந்து செய்யுமானால் கடலில் மட்டுமல்ல கடனிலும் மூழ்கி ஆவின் நிறுவனம் அழிந்து போகும் நாள் வெகுதொலைவில் இல்லை என எச்சரிக்கை செய்வது எங்களது கடமையாக நினைக்கிறோம்” என்று
சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்