விசா வேண்டாம் ; ஆதார் போதும் – நேபாளம், பூடான் பயணிகளுக்கு சலுகை! – AanthaiReporter.Com

விசா வேண்டாம் ; ஆதார் போதும் – நேபாளம், பூடான் பயணிகளுக்கு சலுகை!

15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் நேபாளம், பூடான் செல்வதற்கு பயண சான்றாக ஆதார் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடான் நாட்டு எல்லைப்பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இங்குவந்து வேலை செய்துவிட்டு திரும்பி செல்கின்றனர். அதேபோல் இந்தியாவில்  இருந்தும் இந்நாட்டுகளுக்கு நம்மவர்கள் தங்குதடையின்றி சென்று வருகின்றனர். சுமார் 1850 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தியா-நேபாளம் எல்லைப்பகுதி இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தர பிரதேசம்,  உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களையொட்டி அமைந்துள்ளது. நேபாளத்தில் தற்போது சுமார் 6 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து இந்நாடுகளுக்கு செல்வதற்கு விசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அடுத்த 6 மாதங்கள்வரை செல்லுபடியாகத்தக்க வகையில் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இதுதவிர, இந்திய அரசின்  சுகாதார காப்பீடு அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை துணை ஆவணமாக கொண்டு செல்ல வேண்டி இருந்தது. இந்நிலையில், இந்நாடுகளுக்கு  இந்தியாவில் இருந்து 15 வயதுக்கு குறைவானவர்களும் 65 வயதை கடந்தவர்களும் இனி சென்று வருவதற்கு ஆதார் அட்டை மட்டுமே போதுமானது என மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், நேபாளம், பூடான் செல்லும் இந்தியர் களுக்கு விசா தேவையில்லை. அவர்கள், பாஸ்போர்ட், இந்திய அரசின் வழங்கிய போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை,  வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் போதும். தற்போது வரை, இரண்டு நாடுகளுக்கும் செல்ல, 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ரேசன் கார்டு  ஆகியவற்றை தான் பயண சான்றாக பயன் படுத்த முடியும். ஆதார் அட்டையை பயன்படுத்த முடியாது. தற்போது, ஆதார் அட்டையையும், பயண சான்றாக பயன்படுத்தி கொள்ளலாம். மற்ற வயதினர், ஆதார் அடையை பயன்படுத்த  முடியாது என்று தெரிவித்துள்ளார்.