மைசூரு மகாராஜா குடும்பத்துக்கு 6 தலைமுறைக்கு பிறகு ஆண் வாரிசு! – மக்கள் மகிழ்ச்சி! – AanthaiReporter.Com

மைசூரு மகாராஜா குடும்பத்துக்கு 6 தலைமுறைக்கு பிறகு ஆண் வாரிசு! – மக்கள் மகிழ்ச்சி!

கடந்த 1610-ம் ஆண்டு மைசூரு மகாராஜாவாக அரியணை ஏறிய முதலாம் ராஜா உடையார், விஜயநகர பேரரசை சேர்ந்த திருமலைராஜாவை போரில் வீழ்த்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த திருமலைராஜாவின் மனைவி அலமேலம்மா, “மைசூரு மகாராஜா குடும்பத்துக்கு வாரிசு இல்லாமல் போகட்டும்”என சாபமிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக உடையார் சாம்ராஜ்ஜிய மகாராஜா குடும்பத்துக்கு 6 தலைமுறையாக நேரடி ஆண் வாரிசு இல்லாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடைசி மகாராஜாவாக இருந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் கடந்த 2013-ம் ஆண்டு காலமானார். அவரது மூத்த சகோதரியின் பேரன் யதுவீர் கோபாலராஜே அர்ஸ், 2015-ல் மைசூரு மகாராஜாவாக பட்டம் சூட்டப்பட்டார். அவருக்கு யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் என பெயர் சூட்டப்பட்டது.

கடந்த ஆண்டு இவருக்கும் ராஜஸ்தான் மன்னர் வாரிசான திரிஷிகா குமாரிதேவிக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில், திரிஷிகாவுக்கு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது. 6 தலைமுறைக்கு பிறகு மைசூரு மகாராஜாவுக்கு வாரிசு பிறந்திருப்பதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் அலமேலம்மாவின் சாபம் முடிவுக்கு வந்துள்ளதாக கூறி மைசூரு மக்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.