காஞ்சிபுரம் கருணை இல்லம் தாமஸூக்கு ஆதரவாக சென்னையில் ஆர்பாட்டம்! – AanthaiReporter.Com

காஞ்சிபுரம் கருணை இல்லம் தாமஸூக்கு ஆதரவாக சென்னையில் ஆர்பாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் கருணை இல்லம் நடத்தி வரும் தாமஸூக்கு ஆதரவாக சேப்பாக்கத்தில்  கிறிஸ்தவர்கள் சார்பில் ஆர்பாட்டம்   நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்றோர்களுக்கான கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய்கறி மூட்டையுடன் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது உடல் எடுத்து வரப்பட்டதாகவும், அதே வேனில் பிணத்துடன் இரும்புலியூர் இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜ், அன்னம்மாள் ஆகியோரும் அழைத்து வரப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வருவாய்த் துறை, போலீசார் உள்பட 6 துறை அதிகாரிகள் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 60 பேர் இறந்துள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் 40 முதல் 50 முதியோர் வரை மர்மமாக இறப்பதும் தெரியவந்ததாக கூறப்பட்டது. மேலும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பெரிய சுவரில் அடுக்கடுக்கான பெட்டிகள் போன்ற இடமும் இருந்தது. இந்த அடக்க முறையானது கேரள மாநிலத்திலும், இத்தாலி நகரிலும் உள்ளதாக கருணை இல்ல நிர்வாகி தாமஸ் கூறி உள்ளார்.
இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறுகையில்,கருணை இல்லம் தொடர்பாக முழுமையான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அரசு உத்தரவுப்படி கருணை இல்லம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கதில் பாலேஸ்வரம் கருணை இல்லத்தை நடத்திவரும் தாமஸ்க்கு ஆதரவாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது இந்த போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.