கூகுள் மேப்ஸ் மூலம் பார்வையற்றோரும் பயன் பெறலாம்!

கூகுள் மேப்ஸ் மூலம் பார்வையற்றோரும் பயன் பெறலாம்!

அன்றாடம் மாறி வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து தினமும் புது புது செய்திகள் வந்த வண்ணம்தான் உள்ளன. அந்த வகையில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கூகுள் மேப்ஸ் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

கைக்குள் அடங்கி விட்ட செல்லில் உலக உருண்டையை ஒரு நிமிடத்தில் சுற்றி வந்து, நாம் தேடும் ஊர், தெரு, சாலையைப் பார்க்க உதவும் கூகுள் மேப் சேவை 2005 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வாகனங்களில் செல்பவர்களுக்கும், முகவரியைத் தேடுபவர்களுக்கும் கூகுள் மேப்ஸ் வழி காட்டி யாக செயல்பட்டு வருகிறது. தற்போது வரை பல்வேறு வடிவங்களில் கூகுள் மேப்ஸ் நவீனமய மாக்கப்பட்டுள்ளது. நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு ரயில், பேருந்து, மோட்டார் சைக்கிள், கார், நடைப்பயணம் ஆகியவற்றில் எதைப் பயன்படுத்தலாம் என்பதை விரல் நுனியில் தேடிக் கண்டுபிடிக்க உதவும் கூகுள் மேப்ஸில், தற்போது பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கூகுள் மேப்பை “கிளிக்’ செய்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்தைக் கூறினால்போதும். ஒலி எச்சரிக்கையுடன் கூகுள் மேப்ஸ் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை வழிநடத்தும். அவர்கள் செல்லக் கூடிய சாலையை சரியாக வழிகாட்டும் கூகுள் மேப்ஸ், “பெரிய சாலையைக் கடக்க வேண்டும்’, “சாலையின் வலது புறம் செல்க’, எவ்வளவு தூரத்தில் திரும்ப வேண்டும் ஆகிய எச்சரிக்கைகளையும் அளிக்கிறது.

வாகன நெரிசல், கூட்ட நெரிசல் உள்ள சாலைகளில் செல்லும்போது பார்வையற்றவர்களுக்குத் துல்லியமாக எச்சரிக்கை விடுக்கிறது. சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து எச்சரித்தும், சற்று நின்றுவிட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும், எவ்வளவு தூரத்தில் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதையும் ஒலித் தகவல் மூலம் கூகுள் மேப்ஸ் தெரிவிக்கிறது.

தற்போது இந்தச் சேவை அமெரிக்காவில் ஆங்கிலத்திலும், ஜப்பானில் ஜப்பானிய மொழியிலும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து மொழிகளிலும், இந்தச் சேவை வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!