எடப்பாடி கேபினட் தற்போதைக்கு எஸ்கேப் – ஆனால் எம்புட்டு நாள் தாக்கு பிடிக்கும்?

எடப்பாடி கேபினட்  தற்போதைக்கு எஸ்கேப் – ஆனால் எம்புட்டு நாள் தாக்கு பிடிக்கும்?

சட்டசபையில் அடுத்தடுத்து நடந்த களேபரங்களுக்கு இடையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலாவதாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார். அவருடன் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர்.இதேபோல எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும், அண்ணா நினைவிடத்திலும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

assembly feb 19a

அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சட்டமன்றத்தை முடக்கி ரகளை செய்து வாக்கெடுப்பை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு இன்று (நேற்று) பலர் வந்தார்கள். அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை நினைவாக்குவது தான் எங்களுடைய லட்சியம். ஜெயலலிதா ஆட்சி மலரவேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா எடுத்த சபதம் நிறைவேற்றப் பட்டு இருக்கிறது. 140 ஆண்டுகாலம் இல்லாத வறட்சி தமிழகத்தில் நிலவி கொண்டு இருக்கிறது. பருவமழை பெய்யாததால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு கிடக்கிறது. எனவே எங்களுடைய அரசு குடிநீர் பிரச்சினைக்கு முன்னுரிமை வழங்கும். பிரதமர் மோடியை சந்தித்து வார்தா புயல் நிவாரணம் மற்றும் வறட்சி நிவாரணம் அனைத்தையும் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்வோம்.

‘நீட்’ தேர்வை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்ற முடிவில் இருக்கிறோம். இதற்கான சட்ட முன் வடிவினை ஜனாதிபதியின் அனுமதிக்கு அனுப்பி இருக்கிறோம். அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பிரதமரை சந்திக்கும் போது இந்த கோரிக்கைகளையும் நாங்கள் முன்வைப்போம்.எங்கள் எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் என்று நிரூபித்து இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் தீர்ப்பை பற்றி சட்டசபையில் தி.மு.க.வினர் விமர்சனம் செய்தபோது எங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் எழுந்து பேசவில்லை. ஆக தி.மு.க.வுடன் அவர்கள் அனைவரும் ஐக்கியமாகி விட்டார்கள். ஜெயலலிதாவின் கட்சியை, ஆட்சியை அழிக்க நினைத்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு இருக்கிறது” என்றார் அவர்.

முன்னதாக தமிழகத்தில், ஆளும் கட்சியான அ.தி.மு.க. சசிகலா அணி மற்றும் முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணி என இரண்டாக உடைந்தது. சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சராக கடந்த வியாழக்கிழமை பதவி ஏற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். சட்டசபையில் 15 நாட்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டு இருந்தார்.இதைத்தொடர்ந்து, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து தனது அரசுக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார்.

இதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. நேற்று காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது.கூட்டம் தொடங்கியதும், சபாநாயகர் ப.தனபால் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு, திருக்குறளை வாசித்து இருக்கையில் அமர்ந்தார். அப்போது, அ.தி.மு.க. உறுப்பினர் செம்மலை (ஓ.பன்னீர்செல்வம் அணி) எழுந்து, “அவையில் நீங்கள் தான் எங்களுக்கு பாதுகாப்பு” என்று கூறி, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒன்றை பற்றி பேச முயன்றார். அதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி மறுத்தார். அந்த நேரத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து பேச முயன்றார். அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.ஜெ.அன்பழகன், ப.ரங்கநாதன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு நேர்மையான முறையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் கடும் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் கூறியதை அவர்கள் பொருட்படுத்தாமல் கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.

அப்போது சில உறுப்பினர்கள் காகிதங்களை கிழித்து வீசினார்கள். அத்துடன் சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் மேஜையில் இருந்த புத்தகங்கள், கோப்புகளையும் தூக்கி வீசினார்கள். இதனால் சபையில் பெரும் ரகளை ஏற்பட்டது. சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளரின் இருக்கைகளை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டதால் அவர்கள் செய்வது அறியாது திகைத்தனர். ஜமாலுதீன் தனது இருக்கையை விட்டு எழுந்து சென்றார். அவரது உதவியாளரும் வெளியே சென்றார். அவர்களது இருக்கைகளை தி.மு.க. உறுப்பினர்களில் சிலர் தூக்கி வீசினர்.

சபாநாயகர் இருக்கை முன்பு இருந்த அவரது மேஜையையும் தள்ளிவிட்டனர். அப்போது அவரது மைக்கும் தூக்கி வீசி உடைக்கப்பட்டது. அந்த நேரத்தில், பிளாஸ்டிக் குப்பை தொட்டி ஒன்று பறந்து வந்து அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் மீது விழுந்தது. அது பிளாஸ்டிக் குப்பை தொட்டி என்பதால், அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் சபாநாயகர் பேசுவதற்கு மாற்று மைக் வழங்கப்பட்டது. சரிந்து விழுந்த மேஜையையும் தி.மு.க. உறுப்பினர்களே தூக்கி வைத்தனர். ஆனால், மேஜையில் இருந்த மைக்குக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், மேலும் சில கோப்புகள் பறந்து வந்து விழுந்தன. மீண்டும் சபாநாயகரின் மைக் தூக்கி வீசப்பட்டது. உறுப்பினர்களின் ரகளை காரணமாக சபையே போர்க்களம் போல் காட்சி அளித்தது.நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் மதியம் 1 மணி வரை சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார். சபையில் இருந்து வெளியேற முயன்ற அவரை வெளியே செல்லவிடாமல் தி.மு.க. உறுப்பினர்கள் சுற்றிவளைத்தனர். இதனால், சபை காவலர்கள் ஓடிவந்து சபாநாயகரை கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்டு பாதுகாப்பாக அவரது அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த நேரத்தில் காலியாக இருந்த சபாநாயகர் இருக்கையில் தி.மு.க. உறுப்பினர்கள் கு.க.செல்வம், ப.ரங்கநாதன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக அமர்ந்தனர். சபை ஒத்திவைக்கப்பட்ட போதிலும், அங்கிருந்த தி.மு.க. உறுப்பினர்கள், ‘காப்பாற்று… காப்பாற்று… ஜனநாயகத்தை காப்பாற்று… என்று கோஷம் எழுப்பினர்.அதன்பிறகு, ஊழியர்கள் வந்து, சாய்ந்து கிடந்த மேஜை, நாற்காலி, மைக்குகளை தூக்கி வைத்து சரிசெய்தனர். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை சட்டசபை ஊழியர் ஒருவர் வந்து, சபாநாயகர் அழைப்பதாக கூறி அழைத்து சென்றார். அவருடன், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் உள்பட சில தி.மு.க. உறுப்பினர்களும் சென்றனர்.

பின்னர் 1 மணிக்கு சபை கூடிய போதும் தி.மு.க. உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.இந்த ரகளைக்கு இடையே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, “எடப்பாடி கே.பழனிசாமியை முதல்-அமைச்சராக கொண்ட அமைச்சரவை மீது இந்த பேரவை நம்பிக்கை தெரிவிக்கிறது” என்ற தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது தி.மு.க. உறுப்பினர்களும், ஓ.பன்னீர்செல்வம் அணி உறுப்பினர்களும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டதால் அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே சபை காவலர்கள் வந்து தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்ற முயன்றனர். ஆனால் தி.மு.க. உறுப்பினர்கள் தங்களை நெருங்கவிடாமல் சபை காவலர்களை தடுத்ததோடு, அவர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் மேஜை மீது ஏறி நின்று கூச்சலிட்டனர். ஒரு சிலர் அமைச்சர்களின் மேஜை மீது ஏறி நின்று கொண்டு அமளியில் ஈடுபட்டனர். மேலும், ‘ஒத்திவை… ஒத்திவை… சபையை ஒத்திவை…’ என்று கோஷமிட்டனர். அந்த நேரத்தில், துரைமுருகனும் தனது இருக்கைக்கு முன்பு இருந்த மேஜை மீது நின்றுகொண்டு ஆவேசமாக குரல் கொடுத்தார். அப்போது ஒருவர் புத்தகத்தை தூக்கி வீசினார். அது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இருக்கை அருகே வந்து விழுந்தது.

இதைத்தொடர்ந்து கடும் போராட்டத்துக்கு பின், சபை காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்கள் ஒவ்வொருவராக குண்டு கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினார்கள். அந்த சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்தது. அப்போது சிலர் சபை காவலர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சபையே போர்க்களம் போல் காணப்பட்டது. இதனால் சபாநாயகர் பிற்பகல் 3 மணி வரை சபையை ஒத்திவைத்தார்.

பின்னர் 3 மணிக்கு சபை மீண்டும் கூடிய போது ஓ.பன்னீர்செல்வம் பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பு அளித்தார்.அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், சற்று முன்பு நடந்த அசாதாரண சூழ்நிலையை தவிர்த்திருக்கலாம் என்று கூறியதோடு ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ஒருவாரம் சபையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் சபாநாயகர் அதை ஏற்க மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து பேசிய சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, இங்கு நடந்த அசம்பாவிதத்தை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறிவிட்டு வெளியேறினார். அவருடன் மற்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.இதேபோல் தி.மு.க.வின் மற்றொரு தோழமை கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

C47z3psVcAAxghA

ஓட்டெடுப்பில் வெற்றி

அதன்பிறகு, நம்பிக்கை தீர்மானம் உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில் அ.தி.மு.க.வின் இரு அணிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமே சபையில் இருந்தனர். பகுதி வாரியாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது.முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்மொழிந்த நம்பிக்கை தீர்மானத்தை 122 பேர் ஆதரித்துள்ளனர். (117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தாலே அறுதிப்பெரும்பான்மை கிடைத்துவிடும்). 11 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே தீர்மானம் வெற்றி பெற்று விட்டது என்று சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.

அதை தொடர்ந்து ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மேஜையை நீண்ட நேரம் பலமாக தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.வாக்கெடுப்பு முடிவை சபாநாயகர் அறிவித்துக்கொண்டிருந்த போதே ஓ.பன்னீர்செல்வம் சபையை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வெளியேறினர் எனபது குறிப்பிடத்தக்கது.

டெயில் பீஸ்:

இதனிடையே நேற்றைய கலவரத்தை நேரில் கண்ட சீனியர் நிருபர் ஒருவர் ‘எடப்பாடி கேபினட் இப்போதைக்கு தப்பிச்சிருக்குது.. இந்த சபை யில் நடந்த கலவரத்தை அடுத்து கவர்னர் ஆட்சியை கலைக்க வாய்ப்பில்லை. ஏன்னா 1987ல் ஜெ. மற்றும் ஜானகி அணி கலவரத்தின் போது இரு தரப்பினரும் கவர்னரிடம் போய் புகர் கொடுத்ததால் அப்போது ஆட்சி கலைக்கப்பட்டது.  ஆனால்  இப்போது எதிர்கட்சி தலைவர் தலைமையிலான திமுக-வினர் மட்டுமே மைக்கை உடைத்து, சட்டையை கிழித்து கொண்டு கவர்னரிடம் புகார், காந்தி சிலைக்குக் கீழ் உண்ணாவிரதம் என்று பூச்சாண்டி காட்டினாரே தவிர ஆளும் அதிமுகவினரோ குறிப்பாக ஓ பன்னீர் தரப்பினரோ பிரச்னைய ஏற்படுத்தவுமில்லை.. புகார் கொடுக்கவுமில்லை.. அதனால் இப்போதைக்கு தப்பினாலும் அசெம்பளி இனி கூடும் ஒவ்வொரு நாளும் கலவரம் ஏற்பட்டு  ஆட்சியை கலைக்க முயற்சி நடக்கும் என்பதுதான் சோகம்” என்றார்

error: Content is protected !!