இந்திய மக்களுக்குத்தான் அதிக அளவு மன அழுத்தம்! – உலக சுகாதார மையம் தகவல்! – AanthaiReporter.Com

இந்திய மக்களுக்குத்தான் அதிக அளவு மன அழுத்தம்! – உலக சுகாதார மையம் தகவல்!

டென்ஷன் என்றும் ஸ்டெரெஸ் எனவும் சொல்லப்படும் மன அழுத்தம் என்பது உலக அளவில் மிகப்பெரிய சுகாதார பிரச்சினையாக உள்ளது. இதில், இந்தியாவில், சிறுவர்களும், இளைஞர்களும் கூட பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், மனஅழுத்த விகிதம் வேகமாக அதிகரித்து உள்ளது என்று ஏற்கெனவே தெரிந்த நிலையில் மன அழுத்தம் மற்றும் உளவியல் ரீதியிலான பிரச்சனைகள் இந்தியாவில் தான் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மன அழுத்த தினமான அக்.10ம் தேதியையொட்டி உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள தகவலில் சீனா, அமெரிக்காவை காட்டிலும் இந்தியாவில் வசிக்கும் மக்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாக தெரிய வந்துள்ளது.

அதாவது உலக நாடுகளில் வசிக்கும் மக்களின் உளவியல் மற்றும் மன அழுத்தம் குறித்த பிரச்னை களை உலக சுகாதார மையம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் உலக நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில் இந்தியாவில் வசிக்கும் மக்கள் அதிகளவில் உளவியல் பிரச்சனைக்கு உட்படுவதாக தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் மனநலம் சார்ந்த பிரச்சனைகளை கிட்டத்தட்ட 6.5 சதவிகித மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர் என ஆய்வு தெரிவிக்கிறது. அதிலும் நம் இந்தியாவில், மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களில் 50 சதவீதம்பேர், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர். 75 சதவீதம்பேர், 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். மனஅழுத்தத்துக்கு விசே‌ஷ காரணம் எதுவும் இல்லை. இருப் பினும், போட்டி மனப்பான்மை, காரணமாக இருக்கலாமாம். அத்துடன் இந்த உளவியல் மற்றும் மனநலம் சார்ந்த மருத்துவர்கள் போதிய அளாவில் இல்லாததே நோயின் தன்மை அதிகரிப்பதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு ஒரேஒரு மனநல மருத்துவர் மட்டுமே இருந்து உள்ளார். இந்திய அளவில் பார்க்கபோனால் 2000க்கும் குறைவான மருத்துவமனைகளில் 5,000 மனநல மருத்துவர்கள் மட்டுமே இருதுள்ளனர். மேலும் 2015-16 ம் ஆண்டு தேசிய மனநல சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறு நபர்களில் ஒருவர் மனநல மருத்துவரின் உதவி தேவைப்பட்டுள்ளது. உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அனைவரும் இளம் வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மனநோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைகள் வழங்க மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், மக்களிடையே எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. மனநல பாதிப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவ செலவு அதிகளவில் இருப்பதால் மக்கள் அதனை ஒரு பொருட்டாகவே நினைப்பது இல்லை.

மன அழுத்தம் மற்றும் உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து என்னதான் பேசினால் தாமாக முன்வந்து பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற விரும்ப வேண்டும். மன அழுத்தம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே தீவிரமாக ஏற்படுத்த வேண்டும் எனெனில் இந்த நோய் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டு வருகிறது என உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது கவனிக்கத்தக்கது.