பிரமிக்க வைக்கும் பில்கேட்ஸ்!

பிரமிக்க வைக்கும் பில்கேட்ஸ்!

உலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்சின் ஒட்டு மொத்த வர்த்தக முதலீடு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அவருக்கு வட்டியாக மட்டும் ஒவ்வொரு வினாடியும் 114.16 டாலர்கள் கிடைத்து வருவதால் அவரது முதலீடு ஒவ்வொரு வினாடியும் உயர்ந்து கொண்டே வருகிறது.
இதன் வாயிலாக வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபமும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து பெருகிக் கொண்டே போகிறது. வருமானத்தின் பெரும்பகுதியை உலக நாடுகளின் போலியோ ஒழிப்பு, எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரசாரம் போன்றவற்றுக்காக செலவிட்டு வரும் அவர் இன்றும் கூட அன்றாடம் தான் சாப்பிட்ட தட்டுகளை இரவு வேளைகளில் தானே சுத்தம் செய்து வைப்பதில் மனநிறைவு கொள்கிறார்.அதே சமயம் கடந்த (2013) ஆண்டு அதிக நன்கொடை அளித்த அமெரிக்க கொடையாளர் என்ற பெருமை ‘ஃபேஸ்புக்’ அதிபரான மார்க் ஸுகெர்பெர்க் மற்றும் அவரது மனைவி ப்ரிஸ்ஸிலா சான் ஆகியோரை சென்றடைந்துள்ளது.
bill-gates-1
இந்நிலையில், அமெரிக்க அரசின் உளவு பார்க்கும் நடவடிக்கை, கேட்ஸ் அறக்கட்டளையின் தொண்டுகள், மற்றும் தனது தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் தொடர்பாக சமூக வலைத்தளத்தின் வாயிலாக நேற்று ‘ஆன் லைன்’ மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் சரமாரியாக பதில்களை அள்ளி வீசினார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, தினமும் இரவில் நான் சாப்பிட்ட தட்டுகளை நானே சுத்தம் செய்து வைக்கிறேன். இது எனக்கு மன நிறைவை தருகிறது. ஒரு விஷயம் உங்களுக்கு மன நிறைவை தருகிறது என்றால் அதை செய்யுங்கள். அது மற்றவர்கள் உங்களிடம் எதிர்பார்க்காத ஒன்றாகக் கூட இருக்கலாம் என்று கூறினார்.

மற்றொரு கேள்விக்கு, இப்போதும், தெருவில் 100 டாலர் நோட்டு கிடந்தால் அதை குனிந்து எடுக்க ஒரு நிமிஷம் கூட நான் தயங்க மாட்டேன். இதற்காக எனது நேரம் செலவாவதை பற்றி கவலைப்பட மாட்டேன் என்று அதிரடியாக பதில் அளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இப்படி அசத்திய பில்கேட்ஸின் வாழ்க்கைப் பாதையைக் கொஞ்சம் பார்ப்போமா?பிறந்தது 1955 ல். சாதாரண மிடில்கிளாஸ் குடும்பம். பதின்மூன்று வயதிலேயே கம்ப்யூட்டர் ஆர்வம் வந்துவிட்டது. காரணம், பள்ளியில் கம்ப்யூட்டர்களை வாங்கியது. பள்ளி கம்ப்யூட்டர்களில் உட்கார்ந்து அவற்றை ஆராய்வதுதான் பில்கேட்ஸின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. பதினாறு வயதில் அவருடைய நெருங்கிய நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து சின்னதாய் ஒரு கம்ப்யூட்டர் குழுவைத் துவக்கியிருக்கிறார். அவர்கள் பகுதியிலிருந்த கம்ப்யூட்டர்களுக்கு புரோகிராம் எழுதித் தந்து சம்பாதித்துக் கொண்டிருந்தது அந்தக் குழு.

இங்கே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும். ஒருமுறை உள்ளூர் கம்பெனி ஒன்று சம்பள பட்டுவாடாவுக்கு ஒரு புரோக்ராம் எழுதிக் கொடுக்கச் சொன்னது. அந்த காண்ட்ராக்ட்டை கேட்ஸின் நண்பர்கள் குழு ஏற்றுக் கொண்டது. ஆனால் அதில் ஒரு பிரச்னை. கிடைக்கும் பணத்தைப் பிரித்தால் குழுவிலிருக்கும் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. அதனால் யாராவது ஒருவரை குழுவிலிருந்து வெளியில் அனுப்பிவிட முடிவு செய்தார்கள். அவர்கள் வெளியே துரத்த முடிவு செய்தது பில்கேட்ஸை. அப்போது பில்கேட்ஸ் அவர்களிடம் இப்படிச் சொன்னாராம். ‘‘நான் போகிறேன். ஆனால், என் தேவை ஏற்பட்டு திரும்ப அழைத்தால் சும்மா வரமாட்டேன். இந்தக் குழுவுக்கு தலைவனாகத்தான் வருவேன். ஆனால், அதில் கொஞ்சம் அபாயம் இருக்கிறது. நான் ஒருமுறை தலைவனானால், அதன்பிறகு நானே தான் தலைவனாய் இருப்பேன். என்னை மாற்ற முடியாது.’’ பில்கேட்ஸின் வார்த்தைகளிலிருந்த தீவிரத்தைப் புரிந்துகொண்ட நண்பர்கள் அவரை வெளியே அனுப்பாமலே சமாளித்துக் கொண்டார்கள். ஆனால், பில்கேட்ஸின் தன்னம்பிக்கையான வார்த்தைகள் இன்று உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக அவரை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

இப்படித் தொடங்கிய பில்கேட்ஸின் வாழ்க்கை, கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்றே கழிந்தது. ஒரே ஆர்வம். ஒரே கவனம். வேறு எங்கும் மனம் அலை பாயாமல் கம்ப்யூட்டர், அதில் புரோக்ராமிங், அதில் கிடைக்கும் பணம் இவற்றில் மட்டுமே மனம் ஈர்த்து நின்றது.கல்லூரிக் கல்விக்கு ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால், படிப்பு மேல் கவனம் போகவில்லை. ஒரு வருடத்தில் படிப்பை உதறி கம்ப்யூட்டர் பிஸினஸைத் தொடர்ந்தார்.

1975_ல் நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தைத் துவக்கியது, அப்போது பரபரப்பாக இருந்த ஸ்டீவ் ஜோஸ்பின் ஆப்பிள் கம்ப்யூட்டருடன் போட்டி போட்டது, கம்ப்யூட்டர் தயாரிப்பில் முதலிடத்தில் இருந்த ஐ.பி.எம். நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது, அதன் மூலம் உலகம் முழுதும் பரந்து விரிந்து பிலடெல்ஃபியாவிலிருந்து பெத்தநாயக்கன்பட்டி வரை ‘ஆ! பில்கேட்ஸ்’ என்று பிரமிக்க வைத்தது எல்லாம் வரலாறு.
இந்த வெற்றி வரலாறுக்கு, அடிப்படையில் ஐந்து விஷயங்கள்தான் இருந்தன என்று குறிப்பிடுகிறார் பில்கேட்ஸ். அந்த ஐந்து விஷயங்களைக் கவனிப்போம்.
billgates 2
1. ஆர்வம்
‘எனக்கு கம்ப்யூட்டரில் அணையா ஆர்வம் இருந்தது’ என்கிறார் பில்கேட்ஸ். அந்த ஆர்வம் இன்றுவரை குறையாமல் இருப்பதால்தான் ஈடுபாடோடு வேலை பார்க்க முடிகிறது. வெற்றிகொள்ள முடிகிறது என்கிறார்.

2. புத்திசாலித்தனம்
எந்தச் செயலிலும் புத்திசாலித்தனம் இருக்க வேண்டும் என்பது பில்கேட்ஸின் வாழ்க்கையைப் பார்த்தாலே தெரிகிறது. அவர் ஒவ்வொரு நிறுவனத்திடமும் போட்ட ஒப்பந்தங்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். எல்லாமே பில்கேட்ஸின் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துக்குச் சாதகமாகவும் அதன் எதிர்காலத்துக்கு உதவுவதாகவும்தான் இருந்திருக்கின்றன. ‘‘எதிராளியை குறைத்து மதிப்பிடாமல் அவனை வெல்வது எப்படி என்று யோசித்தாலே புத்திசாலித்தனம் வந்துவிடும்’’ என்கிறார் பில்கேட்ஸ்.

3. உண்மையான உழைப்பு
நம்முடைய உழைப்பு உண்மையானதாக, நேர்மையானதாக இருக்க வேண்டும் என்கிறார் பில்கேட்ஸ். கடமைக்கு உழைப்பதால் எந்தப் பலனும் இல்லை.
வெற்றி பெற வேண்டும், இந்தச் செயலால் நமக்கு பெயர், புகழ், பணம் கிடைக்க வேண்டும் என்று முனைப்போடு தொழில் புரிபவர்களால்தான் வெற்றி காண முடியும் என்பது பில்கேட்ஸின் தத்துவம்.

4. நல்ல குழு
பள்ளியில் படிக்கும் போதே நல்ல குழு இல்லாமல் ஜெயிக்க முடியாது என்பது பில்கேட்ஸ§க்குத் தெரிந்திருக்கிறது. அதனாலேயே தன்னுடைய முயிற்சிகள் எல்லாவற்றிலும் தன் நண்பர்களை இணைத்துக் கொண்டார். நிறுவனத்திலும் மிகச் சிறந்த தொழில்நுட்பாளர்களையே பணிக்குச் சேர்த்தார். கெட்டிக்கார குழு அமைந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பது அவர் சித்தாந்தம்.

5. தலைமை
ஓர் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம், அதன் தலைமை. கெட்டிக்கார குழு இருந்தாலும் அதனை வழி நடத்த திறமையான, செயல்திறன் கொண்ட தலைவன் இல்லாவிடில் வெற்றி கிடைக்காது என்பது பில்கேட்ஸின் வாதம்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள்.

பில்கேட்ஸின் இந்த ஐந்து சமாச்சாரங்களில் வெற்றி கிடைக்கவில்லையென்றால் வேறு எதிலும் கிடைக்காது.

error: Content is protected !!