இந்திய மக்கள் வீடுகளில் 77 விழுக்காடு அளவு ஆயுர்வேதப் பொருட்கள்! – AanthaiReporter.Com

இந்திய மக்கள் வீடுகளில் 77 விழுக்காடு அளவு ஆயுர்வேதப் பொருட்கள்!

கி.மு. 600-ம் ஆண்டில் இந்தியாவில் தோன்றிய மிகப்பழமையான மருத்துவ முறைதான் ஆயுர் வேதம். மனிதர்களைத் தாக்கும் நோய்களைத் தடுப்பதோடு குணப்படுத்தவும் செய்யும் மருத்துவம் இது. அதே சமயம் இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு வேரிலும், ஒவ்வொரு இலையிலும், ஒவ்வொரு மரப்பட்டையிலும் மருத்துவ குணம் உள்ளது என்று ஆயுர்வேதம் சொல்லும் நிலை யில் இந்திய மக்கள் தங்களது வீடுகளில் 77 விழுக்காடு அளவுக்கு ஆயுர்வேதப் பொருட் களைப் பயன் படுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

ஆரோக்கியம் என்பது வானத்திலிருந்து நம் மீது விழுவதில்லை. நமது உடல், நமக்குள்ளிருந்து வளர்வதுபோல, நமது ஆரோக்கியமும் நமக்குள்ளிருந்து வளரவேண்டும். அதற்கான உள்ளீடு பூமியிலிருந்து கிடைத்தாலும், ஆரோக்கியம் என்பது நமக்குள்ளிருந்து தான் வளர வேண்டும். இந்த உடலை நாம் சற்று ஆழமாக உள்நோக்கிப் பார்த்தால், இந்த உடல் என்பது ஒரு முறை நிகழ்வல்ல என்றும் இந்த மண்ணை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்றும் நன்றாகப் புரியும். ஆயுர்வேதத்தின் சாராம்சமும் இந்த அடிப்படையிலேயே இருக்கிறது. உடலுக் கும் மண்ணுக்குமான தொடர்பு சரிவர இயங்கவில்லையென்றால், உள்ளிருந்து இயங்கும் இந்த சூட்சுமமான அமைப்புள்ள மருந்து வேலை செய்யாது. முழு அமைப்பையும் கவனிக்காமல், ஒரு அம்சம் மீது மட்டும் கவனம் செலுத்தினால், அது சரியாக வேலை செய்யாது.

ஒரு முழுமையான மருத்துவ முறை என்றால், இந்த உடல் மட்டுமே எல்லாம் என்று பார்க்காமல் இந்த வாழ்க்கையை முழுமையாகக் கவனிப்பது. அதில் நாம் வாழும் இந்த பூமி, நாம் உண்ணும் உணவு, என்ன சுவாசிக்கிறோம், என்ன அருந்துகிறோம் ஆகிய எல்லாமே அடங்கும். இதனை யெல்லாம் கவனிக்காமல், ஆயுர்வேதத்தின் முழுமையான பலனை உணர முடியாது. ஆயுர்வேதம் நமது வாழ்விலும், நமது சமூகத்திலும் ஒரு நிதர்சனமான உண்மையாக விளங்கினால், மக்கள் கடவுளைப்போல வாழலாம். இதன் அடிப்படையில்தான் இந்தியர்கள் பெரும்பாலானோர் ஆயுர்வேதத்தால் ஆயுசை அதிகப் படுத்தி கொள்கிறார்களாம்.

இதுகுறித்து வெளியாகியுள்ள பிரின்ஸ் வாட்டர் ஹவுஸ் ஹூப்பெர்ஸ் ஆய்வறிக்கையில், “வாழ்க்கை நிலைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்பட்ட நோய்கள் அதிகரித்துள்ளன. இதற்குத் தீர்வாக மக்கள் ஆயுர்வேதப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 2017ஆம் ஆண்டில் இந்திய வீடுகளில் 77 விழுக்காடு ஆயுர்வேதப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2016ஆம் ஆண்டில் 69 விழுக்காடாக மட்டுமே இருந்தது.

ஆயுர்வேதப் பொருட்களின் சர்வதேசச் சந்தை மதிப்பும் அதிகரித்து வருகிறது. 2015ஆம் ஆண்டில் சர்வதேச ஆயுர்வேதப் பொருட்களின் சந்தை மதிப்பு 3.4 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இது 2022ஆம் ஆண்டில் 9.7 பில்லியன் டாலராக அதிகரிக்கும். அதிகரித்து வரும் ஆயுர்வேதப் பொருட்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அத்துறை சார்ந்த நிறுவனங்கள் தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

டெயில் பீஸ்:

நம் நாட்டைப் பொறுத்தவரையில் அதிகளவில் ஆயுர்வேதப் பொருட்கள் உற்பத்தி செய்யும் மாநிலமாகக் கேரளா உள்ளது. ஆயுர்வேதப் பொருட்கள் தயாரிப்பு சார்ந்த 1,400 நிறுவனங்கள் கேரளாவில் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 37 மில்லியன் டாலரில் இந்நிறுவனங்கள் விற்றுமுதல் செய்து வருகின்றன. 2016ஆம் ஆண்டில் மட்டும் 8.3 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுர்வேதப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.