நெஞ்சுப் பொறுக்குதில்லையே!

நெஞ்சுப் பொறுக்குதில்லையே!

இந்தியாவின் ஆகப்பெரிய நோய் கொரனாவோ காலராவோ… அல்லது வேறெந்த நோயோ அல்ல. அது வறுமை. அது பசி. அதற்கு அஞ்சித்தான் உயிரையும் துட்சமென மதித்து வானுயர்ந்த கட்டிடங்களின் உச்சிகளை கட்டியெழுப்ப துணிகிறார்கள், சொற்பகாசுக்காக கொத்தடிமை களாக தன்னையே விற்றுக்கொள்கிறார்கள், விஷவாயு நிறைந்த சாக்கடைகளில் இறங்குகிறார் கள்… அஞ்சு ரூபாய் கூலி உயர்வுக்கென குண்டடிகளை எதிர்கொள்கிறார்கள். இது ஒருநாளை வெறும் முப்பது ரூபாயில் கடக்கிறவர்கள் பெரும்பான்மையாக வாழுகிற தேசம்.

இந்த தேசம் இத்தகைய மனிதர்களின் மேல்தான் வாழ்கிறது. இந்த தேசம் இத்தகைய மனிதர்களின் வியர்வையிலும் ரத்தத்திலும்தான் உயிர்த்திருக்கிறது. இங்கே அரசு எடுக்கிற தவறான ஒவ்வொரு முடிவும் அவர்களைத்தான் முதலில் நோகடிக்கிறது. அவர்களைத்தான் நடுரோட்டில் நிர்கதியாய் நிறுத்துகிறது. அவர்களின் பிள்ளைகளைத்தான் பட்டினி போடுகிறது. டெல்லி-உபி எல்லையில் அணிவகுத்துக்கிடக்கிற லட்சக்கணக்கான மக்களுக்கு பின்னால் இருப்பது பசியன்றி வேறில்லை. இப்போதும் அவர்கள் வரிசைகளில் நாட்கணக்கில் பசியோடுதான் காத்திருக்கிறார்கள். `முட்டாள் மக்கள்… இவர்களால் இப்போது இந்தியாவே ஆபத்தில் இருக்கிறது. கம்யூனிட்டி ஸ்ப்ரெட்டிங் ஆபத்து’ என்று வியாக்கியனம் பேசுகிற ஒவ்வொரையும் செறுப்பால் அடிக்கவேண்டும்.

`எங்களுக்கு இங்கே குடிநீர் கூட இல்லை… கூரை இல்லை… பாதுகாப்பு இல்லை… எங்கள் காவ் களுக்கு போவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை…” என்பதுதான் இந்த இடம்பெயரிகளின் கூக்குரல். யாரும் இங்கே விரும்பியெல்லாம் அகதிகள் ஆவதில்லை. அதுசரி, ஏசி அறையில் அமர்ந்தபடி ராமாயணம் பார்க்கச்சொல்லி அரசியல் பண்ணுகிற அறிவிலி களுக்கு இது ஒருநாளும் கேட்கப்போவதில்லை. அப்படியே கேட்டாலும் அவர்களால் அதை புரிந்துகொள்ளவும் இயலாது.

ஆமாம் இது முழுக்க முழுக்க இந்த அரசுகளின் முட்டாள்த்தனத்தால் நேர்ந்ததுதான். பேருந்து களை ஏற்பாடு செய்திருக்கலாம். முன்பே ஒழுங்காக திட்டமிட்டிருக்கலாம். உழைக்கும் மக்களின் இத்தனை பெரிய இடப்பெயர்வுகள் நிகழும் என்பதை அவதானித்து ஏற்பாடுகளை செய்திருக்கலாம். இப்போதும் அர்விந்த் கெஜ்ரிவால்தான் செய்திருக்கவேண்டும்… என கைகழுவிவிடப்பார்க்கும் அயோக்கியத்தனங்களைத்தான் பார்க்கிறோம்.

அந்த மக்களுக்காக இரங்குகிற உள்ளம் இந்த மூடர்களிடம் இல்லை. உபியில் யார் ஆட்சியில் இருப்பது. ராம நவமிக்கு திட்டமிடுகிற இவர்களால் இந்த மக்களுக்காக ஐந்து நிமிடம் யோசிக்க முடியாதா… அலட்சியப்போக்குடன் செத்தால் சாகட்டும் என்று செயல்படுகிற மனங்களால் மட்டும்தான் இத்தகைய கொடுமைகளை நிகழ்த்த முடியும்.

உபி எல்லையில் மட்டுமல்ல சில நாள்களுக்கு முன் இங்கேயும் சென்னையிலும் கோவையிலும் மதுரையிலும் என எத்தனை லட்சம் பேர் பேருந்து நிலையங்களில் திரண்டனர். தங்கள் ஊர்களை நோக்கி விரைந்தனர். இதெல்லாம் முட்டாள் அரசுகளின் பைத்தியக்காரத்தனங்கள் அல்லாமல் வேறென்ன. நமக்காக நல்ல திட்டங்களை வகுப்பார்கள் என்று நாம் அனுப்பிவைத்த ஆட்சி யாளர்கள் உலகின் எந்த வைரஸையும் விட ஆபத்தானவர்கள். இவர்கள் ஒழியாமல் நமக்கு எந்த விடிவுகாலமும் இல்லை.

வரலாறு எந்த கொடுங்கோலனையும் கொடுமையான ஆட்சியாளர்களையும் நிம்மதியாக சாக அனுமதித்ததில்லை. இந்த கண்ணீர்உங்களையும் ஒருநாளும் அது மன்னிக்காது. நிம்மதியாக சாகவும் அனுமதிக்காது.

அதிஷா

error: Content is protected !!