புதுச்சேரி அதிரடி! – AanthaiReporter.Com

புதுச்சேரி அதிரடி!

நாடெங்கும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளா குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்திய அளவில் முதல் முறையாக கேரள அரசை தொடர்ந்து புதுச்சேரி சட்டசபையிலும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி சட்டசபை இன்று கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் புருஷோத்தமன், ராமநாதன் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதையடுத்து புதுச்சேரி சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தை எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். பாஜக நியமன எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இதை அடுத்து குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் பேசினர். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் கமலக்கண்ணன், “இந்தியாவின் ஆன்மாவைக் கொன்றவங்கள் நீங்கள்” என்று குறிப்பிட்டார்.

இது ஜனநாயகப் படுகொலை. குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டதை எப்படி எதிர்க்க முடியும் என்று தெரிவித்து பாஜக நியமன எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபை வளாகத்தில் மூவரும் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் பேசும் போது, “நாடாளு மன்றத்தால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் மக்கள் அனைவரிடமும் வேதனை யும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இச்சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையாக திகழ்வது மதச்சார்பின்மை. அதை இச்சட்டம் சிதைக்கிறது.

மத அடிப்படையிலான பிரிவினையை எதிர்த்து தன் உயிரைத் தியாகம் செய்த காந்தியை தேசப்பிதாவாகக் கொண்ட நாடு நம் இந்தியா. அவரது எண்ணங்களுக்கும், வழிகாட்டுதல்களுக்கும் எதிரான இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஏற்பது அவரது தியாகத்துக்கு மிகப்பெரிய இழுக்கு.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்கள் இடம் பெறவில்லை. நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கும் எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக, காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினர்கள் மட்டுமே அவையில் இருந்தனர்.

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் விவாதிக்கக்கூடாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.