AanthaiReporter.Com

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கும் இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் (Alphabet) தலைமை நிர்வாக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் இருவரும் ஆல்பபெட் நிறுவன நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விலகினர்.

லாரி பேஜ் தலைமை நிர்வாகியாக இருந்தார். செர்கே பிரின் நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

இருவரும் தங்கள் இணைய தள மேடையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை கூடுதல் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்பபெட் நிறுவனத்தின் தலைவர் பதவி இப்பொழுதைக்கு காலியாகவே இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகின் மிக சக்திவாய்ந்த கார்ப்பரேட் தலைவர்களில் ஒருவராக சுந்தர் பிச்சை உயர்ந்துள்ளார்.

கூகுள் நிறுவனம் மீதும் அதன் அளவு, டேட்டா பிரைவசி நடைமுறைகள், சமூகத்தின் மீதான அதன் தாக்கம் ஆகியவை தொடர்பாக கண்காணிப்பு அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த நிர்வாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பதவி விலகிய துணை நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் வெளியிட்ட செய்தியின் விவரம் :

ஆல்பபெட் நிறுவனம் தற்போது நன்றாக ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. கூகுள் உள்ளிட்ட அதன் துணை நிறுவனங்களும் சுதந்திர கம்பெனிகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் நிர்வாகத்தை எளிமைப்படுத்துவதற்கு இதுதான் சரியான தருணம்.

நிறுவனத்தை சிறப்பாக வழிநடத்த வேறு வழிகள் இருக்கும் போது நாங்கள் அதன் நிர்வாகிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் ஆல்பபெட் மற்றும் கூகுள் இரண்டு நிறுவனங்களுக்கும் தற்போது இரண்டு தலைமை நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் தேவையில்லை.

எனவே சுந்தர் பிச்சை இனி இரண்டு நிறுவனங்களுக்கும் தலைமை நிர்வாகியாக இருப்பார். கூகுள் நிறுவனத்தை வழிநடத்தி ஆல்பபெட் நிறுவனத்தின் முதலீடுகளை அவர் நிர்வகிப்பார்.

நாங்கள் இருவரும் தொடர்ந்து போர்டு உறுப்பினர்களாக இணை நிறுவனர்களாக, பங்குதாரர்களாக எங்கள் பணிகளை மேற்கொள்வோம். மேலும் சுந்தர் பிச்சையுடன் நாங்கள் தொடர்பில் இருப்போம். எங்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் குறித்து அவருடன் ஆலோசிப்போம் என லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் தெரிவித்துள்ளனர்.

இந்த நிர்வாக மாற்றத்தால் ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் பணிகளில் எந்த மாற்றமும் வராது என சுந்தர் பிச்சை தெளிவுப்படுத்தியுள்ளார்.