AanthaiReporter.Com

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே சாமி சிலைகளுக்கு நச்சு காற்று பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக முகமூடிகள் அணிவிக்கப்பட்டுள்ளன.

வட மாநிலங்கள் காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிக்ரா நகரத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ-பார்வதி கோயிலில், சிவன், துர்கா தேவி உள்ளிட்ட தெய்வ சிலைகளின் முகங்கள் முகமூடிகளால் மூடப்பட்டுள்ளன.

கடவுள் சிலைகளை உயிருள்ள தெய்வங்களாகக் கருதுவதாக கூறும் அக்கோயிலின் பூசாரி, கோடைக்காலங்களில் குளிர்ச்சிக்காக கடவுள் சிலைகளின் மீது சந்தனத்தை பூசுவதாகவும் குளிர்காலத்தில் கம்பளிகளால் பாதுகாப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மாசுபாட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக, தெய்வ சிலைகளின் முகத்தில் முகமூடிகளை அணிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் இதை பார்த்து கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களும் மாசு எதிர்ப்பு முகமூடிகளை அணியத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.