AanthaiReporter.Com

நானும் வருஷக்கணக்கா ஒரு கம்பெனி தொடங்கி சாதிக்கணும்னு கனவு காண்றேன். ஆசை வெறும் கானல்நீராப் போச்சு என்று தொழில் ஆர்வம் உள்ளவர்கள் கவலையுடன் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். இதில் பலர் அதிர்ஷ்டத்தையும் ஜாதகத்தையும் காரணம் காட்டுவார்கள்; என்னிடம் பணம் இல்லை; படிப்பு இல்லை; உதவும் சொந்தக்காரர்கள் இல்லை; அனுபவம் இல்லை; என் உடல்நலத்தில் பல கோளாறுகள்; பெண்ணாகப் பிறந்துவிட்டேன்… இப்படி பல சாதனையாளர்களுக்கு இந்தக் காரணங்கள் இருந்திருக்கின்றன. ஆனாலும் அவர்கள் ஜெயித்துக் காட்டியிருக்கிறார்கள் எப்படி?
தொழில் தொடங்கப் பணம் வேண்டாம்

 

* இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், துபாய் போன்ற 18 நாடுகளில் 64 உணவகங்கள், 18 பேக்கரிகள், ஆண்டு விற்பனை 120 கோடிக்கும் மேல்! ஹாட் பிரெட்ஸ் மகாதேவன் வியாபாரம் தொடங்கியபோது, அவரிடம் இருந்த பணம் ஐநூறே ரூபாய்.

 

* 23 கிளைகள் பல இறக்குமதி, காளான் வளர்ப்பு ஆகிய துறைகளில் முத்திரை பதித்திருக்கும் கோவை பழமுதிர் நிலையம் தொடங்கியவர் சின்னசாமி. அவருடைய முதல் கடை, தள்ளு வண்டி!

 

தொழில் தொடங்க படிப்பு வேண்டாம்
* நம்மைப் பேரீச்சம்பழ ரசிகர்களாக்கிய லயன் டேட்ஸ் நிறுவன அதிபர் பொன்னுத்துரையின் படிப்பு பத்தாம் வகுப்பு.

 

தொழில் தொடங்கச் செல்வாக்கான குடும்பப் பின்னணி வேண்டாம்
Bharatmatrimony.com சுமார் பத்து லட்சம் திருமணங்கள் நடக்கப் பாலமாக இருந்திருக்கிறது. மாதம் 35 லட்சம்பேர் உறுப்பினர்களாகச் சேர்கிறார்கள். இந்த வெற்றிக் கதைக்கு வித்திட்ட முருகவேல் ஜானகிராமனின் அப்பா, சென்னை துறைமுகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளி. பதினாறு ஒண்டுக் குடித்தனங்களுக்கு நடுவில் ஒரே ரூம் வீடு.

 

தொழில் தொடங்க அனுபவம் வேண்டாம்
* அறுநூறு கோடிக்கும்மேல் வருட வருமானம் தரும் நம் எல்லே,�ருக்கும் பரிச்சயமான ஃபேஸ்புக்(Facebook) தொடங்கியவர் மார்க் ஸூக்கர்பெர்க் (Mark Zuckarberg) கம்பெனி தொடங்கியபோது அவர் இருபது வயதுப் பொடியர்.

 

தொழில் தொடங்க சிறப்பான உடல்நலம் வேண்டாம்
* டாமி ஹில்ஃபிகர் (Tommy Hilfiger) வடிவமைக்கும் சட்டைகள், டி ஷர்ட்கள் உலகம் முழுக்கப் பிரபலம். இவர் உரை மாறுபாடு எனத் தமிழில் கூறப்படும். நரம்புக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டவர்.

 

தொழில் தொடங்க ஆணாக இருக்க வேண்டாம்
* பயோகான் நிறுவனம் இந்தியாவின் முன்னணி பயோடெக் கம்பெனி. ஆண்டு வருமானம் சுமார் ஆயிரம் கோடி. இதை நிறுவி, தலைமையேற்று நடத்துபவர் திருமதி கிரஸ் மஜும்தார் ஷா.

 

* பாரு ஜெயக்கிருஷ்ணா, குஜராத் மாநிலத்தில் இவர் குடும்பம் பிஸினஸில் ஈடுபட்டிருந்தது. ஏகப்பட்ட நஷ்டம். கம்பெனி மூடப்பட்டது. குழந்தைகள், குடும்பச் செலவுகளுக்கு சொத்துக்களிலிருந்து வந்த வாடகை வருமானம் போதவில்லை. அஸாஹி ஸாங்கோவன் Asaahi Songowon) என்ற பெயின்ட்களுக்கான மூலப்பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியை தம் 48வது வயதில் தொடங்கினார். அதன் இன்றைய வருட விற்பனை இருநூறு கோடிக்கும் மேல்.

 

எனில் பிஸினஸ் தொடங்க என்னதான் வேண்டும்?
* முன்னேறும் வெறி, ரிஸ்க் எடுக்கும் துணிச்சல், தெளிவான இலக்கு, கடும் உழைப்பு, வித்தியாசச் சிந்தனை, நிர்வாகத் திறமை, அவ்வளவுதாங்க… அது போதும்!

 

ஒவ்வொரு படியாக முன்னேறிய கதையை விவரிக்கிறார் சின்னசாமி. தள்ளுவண்டியில் பழம் விற்றவர், இன்று கோவையின் முக்கிய அடையாளமாக விளங்கும் ‘பழமுதிர் நிலையம்’ கடைகளை உருவாக்கிய பின்னணியை விவரிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

“உங்கப்பா சாமிகிட்ட போயிட்டாரு சின்னசாமி’னு சொல்லும்போது எனக்கு 12 வயசு. அப்ப ஓட ஆரம்பிச்சது என் வாழ்க்கைச் சக்கரம். இப்ப அடுத்த தலைமுறை தொழில் பார்க்க வந்த பிறகும், பழக்கடைக்கு ரெண்டு நாள் போகாம இருந்தா, மனசுக்கு என்னமோ மாதிரி இருக்கும். ‘கூடி வாழ்ந்தா கோடி நன்மை’னு சொல்லுவாங்க. அதை நாங்க அனுபவப்பூர்வமா உணர்ந்திருக்கோம். எனக்கு அடுத்து நடராஜன், கந்தசாமி, ரத்தினம்னு மூணு தம்பிங்க. அப்பா இறக்கும்போது கடைசி தம்பி கைக்குழந்தை. வீட்டுக்கு மூத்த பையனா குடும்ப பாரத்தை ஏத்துக்க வேண்டிய நிலைமை.

குழந்தைகளுக்கான விளையாட்டு, கதைகள், பொம்மைகள்னு எதுவும் எனக்குத் தெரியாது. ஒரு இஸ்லாமியர்கிட்ட, ‘பாய், இந்தப் புள்ளைய நீங்கதான் பாத்துக்கணும்னு’ வீட்லேயிருந்து கூட்டிட்டுபோய் ஒரு பழக்கடைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தாங்க. அல்லாவை உண்மையாக நேசிக்கிற முஸ்லிம்தான் அந்த பழக்கடை முதலாளி. ‘கூடுதலா நாலு மணிநேரம் வேலை பார்க்கலாம் சின்னசாமி. யார்கிட்டேயும் பொய் சொல்லாம, திருடாம, யாரையும் ஏமாத்தாம வாழணும்னு’னு சொல்லிக் கொடுத்தார். சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் கடை முதலாளி சொன்னதை கடைப்பிடிக்கிறேன்.

அன்னூர் பஸ் ஸ்டாண்டுல…

நான் முதன்முதலா வேலைபார்த்த பழக்கடை, கோவைக்குப் பக்கத்தில் இருக்கிற அன்னூர் பஸ் ஸ்டாண்டுல இருந்துச்சு. முதல் பஸ் காலையில் 5 மணிக்கு உள்ள வர்றதுக்கு முன்னால கடை திறந்தாகணும். இரவு ஒன்பது மணிக்கு கடைசி பஸ் கிளம்பின பிறகு கடையைச் சாத்தணும். பொங்கல், தீபாவளிக்கு மட்டும் எனக்கு லீவு. முதலாளி ரம்ஜான், பக்ரீத் பண்டிகைக்கும் வேலைபார்ப்பார். வேலையில்லைனு எப்பவும் சும்மா இருந்து எனக்குப் பழக்கம் இல்லை. அந்த சின்னக் கடையில வாடிக்கையாளரை எதிர்பார்த்துட்டு ரெண்டு பேர் உட்கார்ந்துட்டு இருப்போம்.

முதலாளிகிட்ட, ‘பஸ்ல ஏறி பழத்தை விக்கட்டுமா’னு கேட்டேன். ‘பழம் வேணும்னா கடை தேடி வந்து வாங்கப் போறாங்க. கொண்டுபோய் வித்தா மட்டும் வாங்கிடுவாங்களா?’னு சந்தேகமா கேட்டார். நாள் பூரா ஒரே இடத்துல உட்கார்ந்து இருக்கிறதுக்கு பதிலா, புதுசா முயற்சி செஞ்சி பாக்கிறேனு சொன்னேன். ஆர்வமா கேட்டதால சரின்னு சொன்னாரு.

‘டஜன் பழம் 3 ரூபா’

கொஞ்சம் பழங்களைக் கையில் எடுத்துட்டுப்போய் பஸ்ல ஏறி, இறங்கி வித்தேன். அதுதான் நானா எடுத்த முதல் தொழில் முயற்சி. அதுக்கு நல்ல பலன் கிடைச்சது. ‘டஜன் பழம் 3 ரூபா.. டஜன் பழம் 3 ரூபா’னு கூவி வித்து தொண்டை வறண்டுரும். இயல்புல கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ள ஆளு நான். பழங்களை கூவி விற்பனை பண்ணுவேன்னு நினைச்சுக்கூட பாக்கலை. இப்போகூட கடையில் வாடிக்கையாளர்கள்கிட்ட சகஜமா பேசுற நான், தனிப்பட்ட முறையில் அதிகம் பேசமாட்டேன். வாடிக்கையாளர் இருக்கிற இடத்துக்கேபோய், பேசி பழங்களை விற்பனை பண்ணதும், கணிசமா வியாபாரம் அதிகமாச்சு. நானே விரும்பி செஞ்ச வேலைக்குப் பாராட்டும், கூடுதல் சம்பளமும் பரிசா கிடைச்சது. நிறைய உழைச்சா, நிறைய சம்பாதிக்கலாம்னு அப்ப புரிய ஆரம்பிச்சது. அப்புறம் ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் உழைக்க கிடைச்ச வாய்ப்பை தவற விட்டதே இல்லை.

கடையில் சும்மா இருக்கிற நேரத்துல, பழங்களைத் தரம் பிரிச்சு அடுக்கி வைப்பேன். ஓவியம் வரையிற மாதிரி பழங்களை ரசிச்சு அடுக்கி வைக்கிறது எனக்கு பிடித்தமான வேலை. ‘இதுக்கு தனி சம்பளமா குடுக்கப் போறாங்க. சும்மா ஒக்காரலாமில்ல’னு சிலர் சொல்லுவாங்க. உழைக்கிறதுக்கு அப்ப காசு கிடைக்கலைன்னாலும், பின்னால அதுக்கு ஒரு பலன் இருக்கும். சும்மா உட்கார்ந்து சோம்பேறியா மாறினா, அப்புறம் நமக்காக உழைக்கணும்னாலும் உடம்பு வளையாது. பழங்களைத் தரையில கொட்டி விக்கிற கடையைவிட, அதே பழத்தை அழகா அடுக்கி வெச்ச எங்க கடையைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவாங்க. சிலர் மனம்விட்டு பாராட்டிட்டுப் போவாங்க. அதுதான் அந்த வேலைக்கான சம்பளம்.

திடீர்னு வேலை போச்சு…

எந்தக் குறையும் இல்லாம போயிட்டிருந்தா, வாழ்க்கையில் ருசியே இருக்காது. திடீர்னு ஒரு புதுப் பணக்காரர் பஸ் ஸ்டாண்டை குத்தகைக்கு எடுத்ததும், பழக்கடையைக் காலி பண்ணவேண்டிய நிர்ப்பந்தம். ஹைவே ரோட்ல நடக்கிற விபத்து மாதிரி கண் இமைக்கிற நேரத்துல வேலைபோச்சு.

கணவர் இல்லாம, சின்ன சின்ன பிள்ளைகளை வெச்சு அம்மா கஷ்டப்படும்போது வீட்டு பாரத்தைச் சேர்ந்து சுமக்காம, நானே பாரமானேன். மூணுவேளை சாப்பாடும், சம்பளமா கொஞ்ச பணமும் கொடுத்தா எங்க வேணாலும் வேலைக்குப் போகத் தயாரா இருந்தேன். ஊட்டி வரை போனது என் வேலைதேடும் பயணம். ஊட்டியில் மளிகைக் கடை நடத்தும் செட்டியார் கடையில் வேலை. அரிசி, உப்பு மூட்டைகளோடு மூட்டையாக நானும் ஒண்டிகிட்டு ரெண்டு வருஷம் பொட்டலம் கட்டி, பொழைப்பு ஓட்டினேன். எங்க போனாலும் ஒழுக்கம், உழைப்பை மட்டும் கைவிடல. அதனால, எந்த இடத்துல வேலை பார்த்தாலும் அங்க மதிப்பு இருக்கும்.

18 வயதில் பஞ்சாலையில்…

கோயம்புத்தூர்ல கஷ்டத்துல இருக்கிற எல்லா குடும்பமும், எப்படியாவது மில் வேலைக்குப் போயிடணும்னு நினைப்பாங்க. 18 வயசு ஆனாதான் மில் வேலை கிடைக்கும். சிபாரிசு இல்லாம சுலபமா வேலை கிடைக்காது. எங்க அம்மா, அதுக்காக பல இடங்களுக்கு நடையாய் நடந்தாங்க. எனக்கு 16 வயசு ஆனதுமே பல இடத்துல சொல்லி வெச்சதுக்குப் பலனா, நினைச்ச மாதிரியே பஞ்சாலையில் வேலை கிடைச்சது. சூரியன் உதிப்பதற்கு முன்பு தொடங்கி, 15 மணிநேரம் கடுமையாக உழைத்த எனக்கு மில்லில் எட்டு மணிநேரம்தான் வேலை என்றார்கள். ஓவர்டைம் வேலை பார்த்தாலும் 10 மணி நேரத்தைத் தாண்ட முடியவில்லை. அதிலும் ஷிப்ட் முறை வேலை என்பதால், நைட் ஷிட்ப் முடிந்து பகல் முழுவதும் வீட்டில் சும்மா இருப்பது எனக்கு மிகப்பெரிய தண்டனையானது.

ஒரு வருஷத்துல, எனக்கு அடுத்த தம்பி நடராஜனும் மில் வேலைக்கு வந்துட்டாரு. இரண்டு பேரு சம்பளம் வீட்டுக்கு ஓரளவு நம்பிக்கை கொடுக்க ஆரம்பிச்சது. ஒருத்தருக்கு மாசம் 60 ரூபாய் சம்பளம். படிச்சிட்டு வேலைக்குப்போன வாத்தியார் வாங்குற சம்பளத்தைவிட இது அதிகம். கூட வேலை பார்க்கும் பெரும்பாலானவங்க, சும்மா இருக்கிற நேரத்துல சீட்டு ஆடுவாங்க. குடிப்பழக்கம் அதிகமாயிடும். வாங்குற காசு கையில் நிக்காம போயிடும். ‘சும்மாதான இருக்க சின்னசாமி. ஒரு ஆட்டம் போடலாம் இல்ல’னு கேப்பாங்க. சும்மா இருக்கிறதுதான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம். அதனால, எட்டு மணிநேரம் மில் வேலைபோக, வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்.

தள்ளுவண்டியில் பழ விற்பனை

ஏற்கெனவே பழம் வித்த அனுபவமும், மளிகைக் கடையில் வேலைபார்த்த அனுபவமும் இருந்தது. மளிகைக் கடை வைக்க முதலீடு அதிகம் தேவைப்படும். பழம் விக்கிறதுக்கு ஒரு தள்ளுவண்டி இருந்தா போதும். ஒரு பழைய நாலு சக்கர வண்டியை 105 ரூபாய்க்கு வாங்கினேன். 100 ரூபாய்க்கு பழம் வாங்கினேன். கோயம்புத்தூர் டவுன்ல இருந்து கொஞ்சம் தள்ளி குடியிருந்தோம். பழம் வாங்க மக்கள் டவுனுக்குத்தான் போகணும். அவங்க வீட்டுக்கே போய் சப்ளை பண்ணா, அவங்களுக்கு வசதியா இருக்கும்னு தோணுச்சு.

அந்தக் காலத்தில் வீடுகளில் பழமோ, ரொட்டியோ வாங்கினா, ‘என்னங்க, வீட்ல யாருக்கு சுகமில்ல?’ என்கிற கேள்வியை எதிர்கொண்டேயாக வேண்டும். நோயாளிகள் மட்டுமே பழம் சாப்பிடுவார்கள் என்பது மக்களிடம் பரவலாக இருந்த கருத்து. ’உடம்புக்கு முடியலைன்னா பழம் சாப்பிடணும்னு இல்லீங்க. நோய் எதுவும் வாராம இருக்க பழம் வாங்கி சாப்பிடுங்க’னு பிரச்சாரம் பண்ணுவேன். வாடிக்கையாளர்களும், ‘நல்லா பேசுறீங்க’னு பாராட்டுவாங்க. சலிப்பில்லா உழைப்பு யாரையும் எப்பவும் கைவிட்டதில்லை. காலமும் மெதுவாக மாறத்தொடங்கியது.

வாடிக்கையாளர்களே கடவுள்!

தம்பியும் உதவிக்கு வந்தபிறகு வேலைய மாத்தி மாத்தி செஞ்சோம். எங்க கிட்ட பழம் வாங்க காத்திருக்கிறவங்க எண்ணிக்கை அதிகமாச்சு. கடவுள் யார் மூலமா நம்ம கண்ணைத் திறப்பார்னு கணிக்கவே முடியாது. ஆனால், எனக்கு எல்லா நேரங்களிலும் வாடிக்கையாளர்களே கடவுளாக இருந்து, வழி சொல்லி வளர்த்துவிட்டாங்க. அடுத்து நான் என்ன பண்ணனும்னு வாடிக்கையாளர் எனக்கு தொடர்ந்து சொல்லிகிட்டே இருப்பாங்க. அவங்க என்கிட்ட பிரச்சினையா சொல்ற விஷயத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து கேட்பேன். அவங்க குறையா சொன்னதையெல்லாம் சரிசெய்ய ஆரம்பிச்சேன். அதுதான் எங்க அடுத்தடுத்த முன்னேற்றம். `உன்னை எதிர்்பார்த்து காத்திருப்பது கஷ்டமா இருக்கு சின்னசாமி. நீ ஏன் ஒரு கடைபோடக்கூடாது?` என்று நான் எதிர்கொண்ட கேள்வி, எங்க வாழ்க்கையவே மாத்திடுச்சு.

திடீர் அதிர்ச்சி…

என்னுடைய இன்னொரு தம்பி கந்தசாமியும் எங்ககூட தொழில்ல இணைஞ்சதுக்கு அப்புறம் கடை போடுற தைரியம் வந்துச்சு. அப்ப கடைக்குப் பேர் எதுவும் இல்லை. வியாபாரம் மெதுவாக சூடுபிடிக்கிற நேரத்துல, அடுத்த பிரச்சினை வந்தது. எங்க கடைக்குப் பக்கத்திலேயே, ஜிகுஜிகுனு ஜோடிச்சு, நல்ல வெளிச்சதோடு, பழங்களுக்கு அலமாரி செய்து புதுசா ஒரு கடையை திறந்தாங்க. நாங்கள் குண்டு பல்பு வெளிச்சத்தில் தரையில் நியூஸ்பேப்பர் விரித்து பழங்களை அடுக்கும் நிலையில் இருந்தோம்.

போட்டியை எப்படி சமாளிப்பது என்று குழப்பமாக இருந்தது. பக்கத்து கடைபோல செலவு செய்ய எங்களிடம் முதலீடு இல்லை. கடன் வாங்க எப்பவுமே விருப்பம் இல்ல. அப்பதான், ‘தள்ளுவண்டியில் பழம் வித்தபோது சரியா இருந்த நீ, சொந்தமா கடை வெச்சதும் மாறிட்டியே சின்னசாமி. நல்லா இல்லாத பழங்களை கொடுத்துட்டு அநியாய விலை வேற வாங்குறீயே?’னு ஒரு வாடிக்கையாளர் கேட்டதும் அதிர்ச்சியா இருந்தது. நம்பிக்கையான வாடிக்கையாளரிடமிருந்து இப்படி வார்த்தைகள் வருமுன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. கஷ்டப்பட்டு மிச்சம் பிடிச்சு சேர்த்த பணத்தை முதலீடா போட்டு தொடங்கின தொழில்ல, நஷ்டம் வந்தா அதை தாங்கிற நிலைமையில் நாங்க இல்லை. அதைவிட, சொத்தாக நினைத்து சேர்த்த நல்ல பெயரையும் இழந்துவிட்டு நஷ்டமடைவது இரட்டை தண்டனை. எங்க தப்பு நடக்குதுன்னு தேடினோம்.

கார் வைத்திருக்கும் வீடுகளில் டிரைவரிடம் பழம் வாங்கிவரச்சொல்லி அனுப்புவாங்க. டிரைவர்கள் தெரியாமல் பக்கத்துக் கடையின் கவர்ச்சியில் மயங்கி அங்கிருந்து பழங்களை வாங்கிட்டுப் போயிடுறாங்கனு தெரிஞ்சது. ‘‘இந்தக் குழப்பத்துக்கு தீர்வா, உங்க கடைக்கு ஒரு பேர் எழுதி வைங்க’னு இன்னொரு வாடிக்கையாளர் எங்களை அடுத்த முன்னேற்றப் படியில் ஏற்றி நிற்க வைத்தார்.

பிரச்சினை என்று வரும்போதுதான் தீர்வு என்பதையே தேட ஆரம்பிக்கிறோம். ஒரு பழக்கடைக்குப் பேர் வைப்பதெல்லாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அதிசய செயல். முருகக் கடவுளின் ஞாபகமாகவும் ‘பழமுதிர் நிலையம், கோயம்புத்தூர்’னு பெயர் வைத்தக் கையோடு, ஒரு அச்சு சீல் செய்தேன். வாடிக்கையாளர்கள் ஒரு நோட்டையும், வேண்டிய பழங்களையும் சொல்லி அனுப்பினால்போதும். விலை எழுதி அதில் முத்திரையிட்டுத் தருவோம். மாதக் கடைசியில் மொத்தமா பணத்தை வாங்கினோம். வாடிக்கையாளர்களுக்கும் இது வசதியாக அமைந்தது.

வேலையா?… வியாபாரமா?

எங்களுடைய எல்லா தொழில் முயற்சிக்கும், அஸ்திவாரமாக இருந்தது நானும், தம்பியும் மில்லில் வேலை பார்த்ததால் கிடைத்த மாத சம்பளம்தான். எனக்கு பகல் ஷிப்டும், தம்பிக்கு இரவு ஷிப்டும் இருப்பதுபோல வேலையை அமைச்சிக்கிட்டோம். நாங்கள் பழம் விற்பதும், அதற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதும் ஊரில் இருக்கிறவங்களுக்குப் பரவலா அறிமுகமாயிடுச்சு. தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டு, சொந்தமாக இன்னொரு தொழில் செய்தால் நிர்வாகம் ஒப்புக்கொள்ளாது. எங்கள் வேலை நேரம்போக இதை செய்தாலும், விதிமுறைகள்படி நாங்கள் வேலையைவிட்டு விலக வேண்டிய நிலை ஏற்படும்.

எனக்கும், தம்பிக்கும் மில் வேலை கிடைச்ச அப்புறம்தான், எங்க குடும்பத்துகே பாதுகாப்பு உணர்வு வந்துடுச்சு. எந்தவித உத்திரவாதமும் இல்லாத வியாபாரமா? பாதுகாப்பு நிரந்தரமான மில் வேலையா?னு முடிவு எடுக்க வேண்டிய கட்டம் வந்தப்ப, என்ன முடிவெடுக்கிறதுனு தெரியாம தவிச்சோம்..

“உத்தரவாதமான சம்பளப் பணத்தைத் தாண்டி, பஞ்சாலை வேலையில் பல சௌகரியங்கள் உண்டு. வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருளை, ஃபேக்டரி கேன்டீன்ல கடனா வாங்கிக்க முடியும். சலுகை விலையில் உணவு, தீபாவளிக்கு கடனுக்கு துணி, பட்டாசுனு தேவைகளை சிரமம் இல்லாம பூர்த்தி பண்ணிக்க முடியும். எந்தச் சூழ்நிலையிலேயும் ’கடன் வாங்கி’ வாழ்ந்துடக் கூடாதுனு ரொம்ப கவனமா இருந்தேன். ஃபேக்டரி ஸ்டோர்ல மளிகைப் பொருளைக் கடனுக்கு வாங்கினா, அப்புறம் சம்பள பணத்துல பிடிச்சுக்குவாங்க. மேற்பார்வைக்கு இது வசதியா தெரிஞ்சாலும், நம்மை அறியாம கொஞ்சம் கொஞ்சமா இழப்புகளை சந்திப்போம். நான் மாத பட்ஜெட் போட்டு, விலை குறைந்த ஒரு குளியல் சோப் வாங்க நினைத்தால், ஃபேக்டரி கேன்டீனில் விலை அதிகம் கொண்ட சோப் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். கேட்டது கிடைக்கவில்லை என்றால், கிடைப்பதை வாங்க ஆரம்பித்துவிடுவோம். 5 ரூபாய் சோப்புக்குப் பதிலாக 8 ரூபாய் சோப் வாங்கிக்கொண்டு போவோம். இப்படியே ஒவ்வொரு பொருளாக வாங்கத் தொடங்கினால், மாத பட்ஜெட் இரண்டு மடங்கு அதிகமாகும்.

தொழிலாளர்கள் பொதுவாக இதைக் கவனிக்க மாட்டார்கள். நான் கையில் பணம் கொடுத்து பொருள் வாங்கினால், அங்கு கிடைக்கவில்லை என்றால், எங்கு கிடைக்கிறதோ அங்கிருந்து வாங்கிக்கொள்ள முடியும். தேவையான பொருட்களை மட்டும் வாங்குவோம். இப்படி சின்ன சின்ன விஷயங்களைக்கூட கவனிச்சு, கணக்குப் போட்டு வாழ்ந்தோம். இப்படி சிக்கனம் பிடித்து வாழ்க்கை நடத்தி, சொந்தமாக கடை போடும்போது போதிய முதலீடு கையிருப்பு இல்லை.

4 கடை அமைத்தால் ராஜினாமா!

பதிமூன்று வருஷம் மில் வேலையையும், பழக்கடை வியாபாரத்தையும் சமாளிச்சோம். இரண்டு வருஷத்துக்கு ஒருமுறையாவது, மில் வேலையா? சொந்த வியாபாரமா? என்கிற கேள்வி வந்துபோகும். நான்கு சகோதர்களுக்கும் ஒரு கடையும், ஒரு வீடும் கிடைச்ச உடனே வேலையை ராஜினாமா பண்ணிடலாம்னு இருந்தோம்.

1965-ம் வருஷம் தள்ளுவண்டியில் இருந்து ஒரு பழக்கடை வைக்கும் அளவுக்கு முன்னேறினோம். 1973-ல்

இரண்டாவது கடை அமைத்தோம். முதல் கடைக்கும், இரண்டாவது கடைக்கும் உள்ள கால வித்தியாசம் ஆறு வருஷம். கடைசி தம்பி வரைக்கும் கடையைப் பார்த்துக்க வந்ததும், அடுத்தடுத்து மேலும் இரண்டு கடைகள் அமைத்தோம். 1984-ம் வருஷம் நாலாவது கடை அமைத்ததும், மில் வேலையை ராஜினாமா பண்ற தைரியம் வந்துருச்சு. அப்புறம் 24 மணிநேரமும் பழக்கடையைப் பற்றிய சிந்தனை மட்டும்தான் இருந்தது.

மிக்ஸியும்…ஜூஸும்…

பீளமேடு பி.எஸ்.ஜி. காலேஜ் எதிரில் அமைத்த முதல் கடைதான் எங்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. அங்க பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பழங்கள் உடலுக்கு எவ்வளவு ஆரோக்கியம்னு நல்லா தெரிஞ்சிருந்தது. ஜுரத்துக்குப் பழம் வாங்கின காலம்போய், நோய் வராம ஆரோக்கியமா வாழறதுக்கு பழங்கள் சாப்பிடணும்னு விழிப்புணர்வோட இருந்தாங்க. வழக்கமா பழம் வாங்கிற பேராசிரியர் ஒருத்தர், ‘இப்போ மிக்ஸினு ஒரு மெஷின் வந்திருக்கு. அதுல பழங்களை ஜுஸ் அடிக்கலாம். நீங்க ஏன் பழச்சாறு விக்கக்கூடாது’னு கேட்டாரு. அப்போதான் மிக்ஸினு ஒரு இயந்திரம் வந்திருக்கிறதே தெரியும். போறபோக்குல அவர் சொன்ன ஐடியா மூளைக்குள்ள ஏறிடுச்சு. புது மிக்ஸி வாங்க வசதி இல்லை. ஒரு பழைய மிக்ஸியை விலைக்கு வாங்கினோம்.

அடுத்து, ஜூஸ் போடுறது எப்படினு கத்துக்கிட்டு, ‘இங்கே பழச்சாறு கிடைக்கும்’னு எழுதிப்போட்டோம். “மக்கள் பழம் வாங்கி சாப்பிடுறதே உலக அதிசயம். இதுல ஜூஸ் வாங்கி யாரு குடிப்பாங்க. ரொம்பதான் ஆசை”னு சிலர் கிண்டலும், கேலியும் பண்ணாங்க. அதில் உண்மையும் இருந்தது. நாலு சாத்துகுடி பழத்தை அஞ்சு ரூபாய்க்கு விற்று விடலாம். எட்டு பழங்களைச் சாறாக பிழிந்தால் ரெண்டு க்ளாஸ் ஜூஸ் வரும். அதை எட்டு ரூபாய்க்கு விற்பதற்குள் பல கேள்விகள் கேப்பாங்க. “எட்டு பழத்துக்கு இவ்ளோதான் ஜூஸ் வந்துச்சா”னு சந்தேகமா பார்ப்பாங்க. ’தண்ணீர் கலந்து விக்கிறோமா?’னு சந்தேகம் வரும். ஜூஸ் போடுகிற கடைகளில் அதைத்தான் பண்ணிட்டு இருந்தாங்க. அதனால், ஜூஸ் குடிக்கிற சிலரும், சந்தேக கண்ணோட ஜூஸ் போடுறதையே கவனிப்பாங்க. ‘பழத்தின் உண்மையான சுவை அப்படியே கிடைக்கிற மாதிரி ஜூஸ் போடுறோம். சொட்டு தண்ணி கலக்ககூடாது’னு முடிவு எடுத்தோம். இன்னைக்கு வரைக்கும் எல்லா பழமுதிர் நிலையத்திலும் இதே நடைமுறைதான் இருக்கு.

பேரம் கிடையாது!

தண்ணீரே கலக்காமல் ஜூஸ் போட்டோம். எலுமிச்சை பழத்தில் ஜூஸ்போட தண்ணீர் கலக்க வேண்டும் என்பதால், நாங்கள் ‘லைம் ஜுஸ்’போடுவதில்லை என்பதையே தீர்மானமாக எடுத்தோம். அதே மாதிரி பழங்கள் வாங்கும்போது சிலர் பேரம் பேசுவாங்க. இதில் நாங்கள் கறாராக தொழில் செய்வோம். பேரம் என்பதே எங்ககிட்ட கிடையாது. லாபம் குறைத்துக் கொண்டு விற்பனை செய்யக்கூட தயாராக இருந்தோம். இன்று வரை எங்களிடம் பேரம் கிடையாது. சில நாட்களில் பழங்கள் விற்பனை ஆகாமல் மீதமானால், குறைந்த விலைக்குக் கொடுப்பது வழக்கம். அடுத்தடுத்த நாட்களில் அந்தப் பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலைமை உருவாகும். அத்தகைய சூழலில் ‘வந்த வரைக்கும் லாபம்’ என்று ஆளுக்கேற்றாற்போல விற்பனை செய்வார்கள். அத்தகைய சூழலில்கூட நாங்கள் ஆளுக்கொரு விலை விற்பனை செய்வதில்லை. அதை நஷ்டமாகவே ஏற்றுக்கொள்வோம்.

`நாம ஒருத்தருக்கு விலை குறைவா கொடுத்தா, இன்னொருத்தர்கிட்ட விலையை ஏத்தி விக்கணும். எல்லாருக்கும் ஒரே விலை. நம்ம ஊர்ல பேரம் பேசாம ஒரு கீரைக்கட்டுகூட வாங்கமாட்டாங்க. கறாரா இருந்தா, தொழில்ல முன்னேற முடியாது`னு சிலர் அறிவுரை சொன்னாங்க. நாங்கள் எடுத்த முடிவில் இப்போதும் உறுதியாக இருக்கிறோம். தரமான பொருள், நியாயமான விலை என்பது எங்கள் கொள்கை. பக்கத்துக்கடையில் பத்து ரூபாய்க்கு ஒரு க்ளாஸ் ஜூஸ் விற்றால், தண்ணீர் கலக்காத ஜூலை நாங்கள் இருபது ரூபாய்க்கு விற்றாக வேண்டும். தரத்துக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. எங்களிடம் வாங்கும் பொருளின் தரமும், விலையும் சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கையை வாடிக்கையாளர்களிடம் உருவாக்கினோம். அதுதான் எங்களின் உண்மையான வெற்றி.

அடுத்த நகர்வு காய்கறி

பழங்கள் வாங்க வர்றவங்க, காய்கறி வாங்க வேறொரு இடத்துக்குப் போக வேண்டிய நிலைமை இருந்தது. பழத்தோடு காய்கறிகளையும் விற்பனை செய்யலாம்னு யோசனை வந்தது. இது அடுத்த முக்கிய நகர்வா அமைஞ்சது. வாடிக்கையாளர்களின் தேவை உணர்ந்து நாங்கள் தொடங்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சது. அடுத்து, கடையில் ஒரு முக்கிய மாற்றத்தை நடைமுறைப்படுத்தினோம். பொதுவா, கடைகளில் வாடிக்கையாளர்கள் பொருளைக் கேட்பாங்க. வியாபாரிகள் எடுத்துக் கொடுப்பாங்க. வெளிநாடுகளில் நடைமுறையில் இருக்கும் வழக்கத்தைப்போல, வாடிக்கையாளருக்கு வேண்டிய காய்கறியை அவங்களே தேடி எடுத்துட்டு வந்து, அப்புறம் பில்போடும் முறையை அறிமுகப்படுத்தினோம். இல்லத்தரசிகள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது. அதேமாதிரி எடையை நிறுத்து விலையைக் கூட்டி பணத்தை வாங்கறதுக்குள்ள நிறைய குழப்பம் ஏற்படும். பழங்கள், காய்கறி வாங்கினா கம்ப்யூட்டர் பில் போடும் வழக்கத்தை முதல்ல நாங்கதான் அறிமுகப்படுத்தினோம்.

கம்ப்யூட்டர் பில் அறிமுகப்படுத்தும் வரை, கடையில் யாரையும் நம்பிவிட முடியாது. அதனால், கடையைவிட்டு எங்களால் நகரமுடியாது. கணக்கு குறைஞ்சா யாரைனு சந்தேகப்பட முடியும். கம்ப்யூட்டர் பில் வந்த பிறகு எங்களுக்கும் வசதியாப் போச்சு. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வாடிக்கையாளருக்குத் தேவையான வசதிகளை செஞ்சி கொடுக்கிறதும், கடையை நவீனப்படுத்தும் முயற்சிகளையும் தொடர்ந்து செய்கிறோம்.

ஒற்றுமையே பலம்

சகோதரர்கள் எல்லாரும் இணைஞ்சு ஒத்துமையா தொழில் செய்தோம். அதுதான் எங்களின் பெரிய பலமாக இருந்தது. தம்பிகளும் தடம் மாறாம, கவனம் சிதறாம கடையைப் பார்த்துகிட்டாங்க. காசு சேர சேர உறவு பிரியும்னு சொல்லுவாங்க. முருகன் அருளால எங்க சகோதர உறவு ஒத்துமையா போகுது. எங்களுக்கு அதைவிட ரொம்ப சந்தோஷம், எங்களைப் போலவே எங்க பிள்ளைகளும் ஒத்துமையா இருக்காங்க.

கோவையில் மட்டும் 12 கடைகள் இருக்கு. ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, சென்னைனு 40 கிளைகள் வந்தாச்சு. வெளியூரில் கிளைகள் தொடங்கும்போது, ‘கோவை பழமுதிர் நிலையம்’னு பேர் வெச்சோம். எங்க போனாலும் ஊரோட அடையாளத்தையும் சேர்த்தே எடுத்துட்டுப் போறோம்’’ என்று நினைவுகளை அடுக்குகிறார் சின்னசாமி.

அடுத்த தலைமுறை!

அவருக்கு அடுத்து அவருடைய மகன் துரை, தந்தையைப்போல காலையில் 6 மணிக்கெல்லாம் மார்க்கெட்டில் நிற்கிறார். தரமானப் பொருட்களைத் தேடித்தேடி கொள்முதல் செய்கிறார்.

“அப்பா, சித்தப்பா மாதிரியே நாங்களும் வேலைகளைப் பிரிச்சிக்கிறோம். நான் பழங்களைக் கொள்முதல் பண்ணா, அவங்க பாத்துக்கிற கடைகளுக்கும் சேர்த்தே பண்ணுவேன். சித்தப்பா பசங்க காய்கறி கொள்முதல் பண்ணும்போது நான் பாத்துக்கிற கடைகளுக்கும் சேர்த்தே வாங்குவாங்க. எங்க தலைமுறையில் செல்போன், இன்டர்நெட் கம்யூனிகேஷன் வசதி நல்லாவே இருக்கு. அதனால் எங்க யாரு இருந்தாலும் பேசிக்கிறோம். நான் எடுக்கிற முடிவு மற்றவங்களுக்கு உடன்பாடு இல்லேன்னா, வெளிப்படையா சொல்லுவாங்க. முடிவுகள் ஒருவேளை ஒத்து வரலைன்னாலும், ஈகோ வராது. யார் எந்த கடையைப் பாத்துக்கிறாங்களோ அங்கமட்டும் எங்க முடிவை நடைமுறைப்படுத்துவோம்.

அப்பா, சித்தப்பாங்க மாதிரி நாங்க கஷ்டப்படலைன்னாலும், அவங்க பட்ட கஷ்டத்தைப் பார்த்துதான் வளர்ந்தோம். அப்பா, சித்தப்பா எல்லாருமே வீட்ல இருந்த நேரத்தைவிட, கடையில் இருந்த நாள்தான் அதிகம். தீபாவளி, பொங்கல்னு நல்ல நாளா இருந்தாலும் லீவு எடுக்காம கடைக்கு வந்துடுவாங்க. இதெல்லாம் பார்த்து வளர்ந்த நாங்களும், உழைக்கிறதுக்குப் பழகிட்டோம். நான் முதுகலை படிப்பு முடிச்சிருக்கேன். ஆனா, மூணாங் க்ளாஸ் தாண்டாத அப்பாகிட்ட இருக்கிற தொழில் நேர்த்தியைக் கத்துக்க இன்னும் எத்தனை வருஷமாகும்னு தெரியாது. ’பழமுதிர் நிலையத்தை’ வெறும் பழங்கள், காய்கறிக் கடையா மட்டும் இல்லாம, டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் மாதிரி நவீனமா மாத்தியிருக்கோம். ஆன்-லைன்ல காய்கறிகள் வாங்கிற காலம் இது. பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இங்கவந்து பழங்கள் விற்பனை செய்றாங்க. கால மாற்றத்துக்கு ஏற்ற மாதிரி புதுப்புது முயற்சிகளை நாங்களும் செய்றோம். என்ன பண்ணாலும், பெரியவங்க சேர்த்து வெச்சிருக்கிற நல்ல பேரைக் காப்பத்துற மாதிரி நடந்துக்கணும்னு கவனமா இருக்கோம்” என்கிற துரை, பழமையும் புதுமையும் கலந்த கலவையாக இருக்கிறார்.

உழைப்பே உயர்வு

“ஒரு நாள்ல குடும்பத்தோட இருந்த நேரத்தைவிட, பழங்களோடவும், காய்கறிகளோடவும் இருக்கிற நேரம்தான் அதிகம்” என்று சிரிக்கிற சின்னசாமிக்கு, வீடும், தொழிலுமே இரு கண்களாக விளங்குகிறது. “எதற்கெடுத்தாலும் ஆஃபர் தருகிற காலத்தில், சலுகையோ, விளம்பரமோ

இல்லாமல் நல்லாவே தொழில் செய்றோம். இதுவரை 22 நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். எங்குபோனாலும் பழ விற்பனையில் என்ன புதிய யுத்தி வந்திருக்கிறது என்பதைக் கவனிப்பதுதான் என்னுடைய முக்கியமான வேலை. எங்கள் தொழிலில் எந்த புது மாற்றத்தையும், நாங்கள்தான் முதலில் செய்யவேண்டும் என்பதில் அக்கறையோடு இருப்போம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பெறுகிறார்கள். இன்றும் அதிகாலை தொடங்கும் உழைப்பு, இரவு பதினொரு மணிவரை நீடிக்கவே செய்கிறது.

மில் தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கிய நாங்கள், இன்று சொந்தமாக தொழிற்சாலை நடத்துகிறோம். மகன் துரை, ஹோட்டல் துறையிலும் கால் பதித்து இருக்கிறார். வாழ்வில் எந்த உயரத்தைத் தொட்டாலும், உழைப்பை மட்டும் நாங்கள் கைவிடவில்லை” அழுத்தம் திருத்தமாக சொல்கிற சின்னசாமியிடம் இன்றைய இளைய தலைமுறை கற்றுக்கொள்ள ஏராளமான பாடங்கள் உண்டு. ‘உழைப்பே உயர்வு’ என்பது அதில் முதன்மையான பாடம்.

 

http://www.tamil.theweekendleader.com/Success/172/father-sold-fruits-in-bus-stand-son-ceo-of-rs-220-crore-fruit-chain.html

 

வேலையில் இருக்கட்டும் உற்சாகம் வெற்றிக்கு அதுவே அச்சாரம் !!