கேட்டீயளா சேதியை.. . சீனாவுக்கு வர ஜின்பிங் விடுத்த அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி! – AanthaiReporter.Com

கேட்டீயளா சேதியை.. . சீனாவுக்கு வர ஜின்பிங் விடுத்த அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி!

சீன அதிபர் ஜி ஜின்பி்ங், பிரதமர் மோடி இடையிலான 2-வது முறைசாரா சந்திப்பு மாமல்லபுரத்தில் நேற்றும், இன்றும் நடந்தது. இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, தீவிரவாதம், தீவிரவாத ஒழிப்பு, எல்லைப்புற பிரச்சினைகள், வர்ததகத்தில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்த போது அடுத்தாண்டு சீனாவில் நடைபெறும் முறைசாரா சந்திப்பில் பங்கேற்க, ஜின்பிங் விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே, மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறை சாரா சந்திப்பு குறித்து, வெளி யுறவுத் துறைச் செயலாளர் விஜய் கோகலே, பெரியநெம்மேலியில் அமைக்கப்பட்ட ஊடக மையத்தில், செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமர் மோடியும், சீன அதிபரும், இரண்டு நாட்களிலும் சேர்த்து, 6 மணி நேரம் தனித்துப் பேசியதாகவும், பரஸ்பரம் அதிகாரிகள் குழுவோடு இணைந்து, ஒரு மணி நேரம் பேசியதாகவும் தெரிவித்தார். இரு தலைவர் களுக்கும் பேச்சுவார்த்தை மிகுந்த திருப்தியளிப்பதாகவும், பரஸ்பர உறவுகள் நல்ல முன்னேற்றம் அடையும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவின் ஊகான் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைப் பிறகு, மாமல்லபுரம் முறைசாரா பேச்சுவார்த்தை இருதரப்பு உறவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருப்பதாக, வெளியுறவுத்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது. மேலும் வர்த்தகப் பற்றாக்குறையைப் போக்கு வது குறித்தும், எந்தெந்த துறைகளில், முதலீடு செய்யலாம் என்பது பற்றியும், மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன், சீன துணை அதிபர் வாங் குயிஷான் (Wang Qishan) இணைந்து பேசி நல்லதொரு முடிவை எட்டுவார்கள் என இருதலைவர்களும் உறுதிப்பூண்டிருப்பதாக, வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.

குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், மருந்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரம், சுற்றுச் சூழல் உள்ளிட்ட துறைகளில், இந்திய தொழில் அதிபர்கள் முதலீடு செய்வதை, பிரதமர் மோடி யுடனான சந்திப்பின்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்றுள்ளதாக, வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.

சீனாவில், மக்கள் குடியரசு அமைந்ததன் 70ஆவது ஆண்டுவிழா, இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, இந்தியா-சீனா இடையே, மக்களோடு, மக்கள் என்ற அடிப்படையில், இருநாடுகளிலும், மொத்தம் 70 கலைநிகழ்ச்சிகள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில், 35 நிகழ்ச்சிகள் சீனாவிலும், 35 நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடத்த, பரஸ்பரம் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைலாஷ்-மானசோரவர் யாத்திரையின்போது, போதிய ஒத்துழைப்பு வழங்குவதற்கு சீனா முடிவு செய்திருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நடவடிக்கை குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடியும், சீன அதிபரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இருநாடுகளுக்கு இடையிலான ராணுவ உறவை வளர்ப்பது பற்றியும், தீவிரவாதத்தை ஒடுக்கு வதில், இணைந்து செயல்படவும், பிரதமர் மோடியும், சீன அதிபரும் முடிவு செய்துள்ளனர். அதே வேளை, இருபெரும் தலைவர்களுக்கு இடையிலான, மாமல்லபுரம் முறைசாரா சந்திப்பில், காஷ்மீர் விவகாரம் குறித்து பேசப்படவில்லை என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.