தவறாகப் பயன்படுத்தப்படும் போக்சோ சட்டம் – ஐகோர்ட் எச்சரிக்கை!

டெல்லி நிர்பயா வழக்கு, உத்திரப்பிரதேசம் உன்னாவ் வழக்கு, காஷ்மீர் கத்துவா சிறுமி வழக்கு என்று, ஒருசில வழக்குகள் நாடு முழுக்க பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் கோவை சிறுமி வழக்கு, அயனாவரம் சிறுமி வழக்கு, குன்றத்தூர் சிறுமி வழக்கு, திருவைகுண்டம் சிறுமி வழக்கு, அரியலூர் மாணவி வழக்கு, பொள்ளாச்சி, விழுப்புரம் வன்கொடுமைகள் என சில வழக்குகள் பொதுக் கவனம் பெற்ற நிலையில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டத்தான் தனியாக போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது.  இந்நிலையில் போக்சோ சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அதாவது பெற்ற மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக முன்னாள் கணவர் மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அதன் பேரில் அப்பெண்ணின் முன்னாள் கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த முன்னாள் கணவர்,முன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை யின்போது பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சிறுமியை அழைத்து வாக்குமூலம் பெறப்பட்டது.

அப்போது அவரது தாய் கொடுத்த புகார் பொய் என்று தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதோடு, கணவர் மீது போடப்பட்ட போக்சோ வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

குழந்தையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக தாய், இதுபோன்ற செயலில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது. குழந்தைகளைப் பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டமான போக்சோவை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

error: Content is protected !!