அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கப்படாது- ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் வேண்டுகோள்! – AanthaiReporter.Com

அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கப்படாது- ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் வேண்டுகோள்!

கச்சி, கச்சிப்பேடு, பிரளய முத்து, சிவபுரம், திரிமூர்த்திவாசம், பிரம்மபுரம், காமபீடம், சகற்சாரம், சகலசித்தி, கன்னிகாப்பு, துண்டீரபுரம், தண்டகபுரம் மற்றும் பல பெயர்கள் கொண்ட காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் மனவாளமாமுனிகள் மடத்தின் சடகோபராமானுஜ ஜீயர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

வரதராஜ பெருமாள் கோவிலில் முன்பு மூலவராக இருந்த ஆதி அத்தி வரதர் சிலை. இப்பொழுது அனந்த சரஸ் குளத்தில் நீருக்கு அடியில் இருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர் வெளியே இருந்து மொத்தம் 48 நாட்கள் தரிசனம் தருவார். 48 நாட்கள் வெளியில் இருக்கும் அத்தி வரதர் முதல், 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த, 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார். இதற்கு முன் அத்தி வரதர் 1979ம் ஆண்டு ஜூலை, 2ல் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அத்திவரதரை காண நாள்தோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகின்றது. கடந்த 21 நாட்களில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் அத்திவரதரை தரிசித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி அளித்துள்ளார். அதாவது, காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் அருள்பாலித்து வரும் அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது. சேற்றிலும் தண்ணியிலும் பகவான் ஏன் கஷ்டப்பட வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக பூஜை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவரை அதே இடத்தில் வைத்து சேவிப்பதற்கு.. பொதுமக்கள்.. லட்சோபலட்சம் மக்கள் இப்போது வந்து கொண்டிருக்கிறார்கள். காஞ்சிபுரம்கூட மறுபடியும் திருப்பதி ஆகிவிடும். அதனால், தயவுசெய்து இந்த விக்கிரகத்தை புதைக்க வேண்டாம். இப்போதைக்கு அப்படியேகூட வச்சிக்கலாம். ஏன்னா.. இத்தனை வருஷமா பூஜை பண்ணல. ஆனா.. ஒரு பவர் உண்டு. அந்தப் பவர் இருக்கிறதுனாலதான்.. ஆகர்ஷ சக்தி இருக்கிறதுனாலதான் இத்தனை மக்கள் அவரைத் தேடி வந்துக்கிட்டிருக்காங்க. ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறதுனால.. வரம் தரக்கூடிய அத்திவரதரை தேடி வருகிறார்கள். அத்திவரதரை வெளியே எடுத்ததுனாலதான்.. அங்கங்கே மழை பெய்யுது. இன்னும் நிறைய மழை பெய்ய வாய்ப்பு இருக்குது’என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் திருட்டு பயம் அதிகமாக இருந்ததால் அத்திவரதரை குளத்தில் வைத்தனர். ஆனால், தற்போது அது தேவையில்லை. தற்போது பாதுகாப்பு அதிகமாக உள்ளது. காற்றும் ஒளியும் புகாத குளத்தில் மீண்டும் அத்திவரதரை வைக்கக்கூடாது என்பதால் நாங்கள் அனைவரும் முதலமைச்சர் சந்தித்து கோரிக்கை கூற உள்ளோம் என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோபராமானுஜ ஜீயர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.