மழை வருது.. மழை வருது – குடை கொண்டு போங்க! – AanthaiReporter.Com

மழை வருது.. மழை வருது – குடை கொண்டு போங்க!

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தண்ணீர்ப் பஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனாலும் தமிழக அமைச்சர், “தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லை, தண்ணீர்ப் பற்றாக்குறை தான் நிலவுகிறது” எனக்கூறி  ஒரு பக்கம் சமாளிக்க்கும் நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங் களில் அடுத்த இரண்டு நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதில், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகக்கூடும். தமிழக கடற்கரைப் பகுதிகளில் தென்மேற்கு திசை நோக்கி 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 8 சென்டி மீட்டர், திருத்தணியில் 6 சென்டி மீட்டர், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 5 சென்டி மீட்டர், தர்மபுரி மாவட்டத்திலும் வேலூர் காவேரிப்பாக்கத்திலும் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.