AanthaiReporter.Com

விண்வெளியில் தனக்கென ஒரு விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க இந்தியாவின் விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் விரும்புகிறது. இதற்கான அனுமதியை அரசிடம் பெற விரிவான திட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க இருக்கிறது. இந்த தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் டாக்டர் சிவன் செய்தியாளர்களிடம் வியாழனன்று தெரிவித்தார்.

இந்தியர்களுடன் விண்கலம் ஒன்றை விண்ணில் வரும் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வானில் செலுத்திய பிறகு விரிவான அறிக்கையை அரசிடம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் எனவும் சிவன் குறிப்பிட்டார்.

விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இல்லாத சூழ்நிலையில் சோதனைகளை நடத்த இஸ்ரோ விரும்புகிறது. அதற்கு ஒரு சிறிய விண்வெளி ஆய்வு தளத்தை வானில் நிறுவ விரும்புகிறது. அது இந்தியாவுக்கு சொந்தமான விண்வெளி நிலையம் ஆக இருக்க வேண்டும் என்பது இஸ்ரோவின் விருப்பம். இந்த விண்வெளி ஆய்வு நிலையத் திட்டம் எங்களின் பெரும் விருப்பமாக உள்ளது.

இந்தியர்களுடன் விண்வெளியில் விண்கலத்தை செலுத்திய பிறகு, இந்திய விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான விரிவான திட்டத்தை தயாரிப்போம்.

இந்தியாவின் புதிய விண்வெளி ஆய்வு நிலையம் 20 டன் எடை கொண்டதாக இருக்க வேண்டும். பூமிக்கு மேலே 400 கிலோ மீட்டர் உயரத்தில் அது சுற்றி வர வேண்டும். அந்த விண்வெளி ஆய்வு நிலையத்தில் 15 முதல் 20 நாட்கள் விண்வெளி வீரர்கள் தங்கி இருக்க வசதி இருக்க வேண்டும்.

இந்தியர்களுடன் விண்வெளிக் கலத்தை வானில் செலுத்திய பின் 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் புதிய இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியர்களின் விண்வெளி பயணம் குறித்து மத்திய விண்வெளி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் பேசினார். இந்தியர்களின் விண்வெளிப் பயணம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தன்று அல்லது அதற்கு முன்னதாக அமையும் எனக் குறிப்பிட்டார் இதற்காக ரூபாய் 10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர்களின் விண்வெளிப் பயணம் குறித்து ஆலோசனைகளைப் பெறுவதற்காக தேசிய ஆலோசனை கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு விண்வெளி தொடர்பான அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.

2 அல்லது 3 விண்வெளி வீரர்களை தேர்வு செய்து முதலில் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களை தேர்வு செய்யும் பணி 6 மாதங்களில் துவங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்கள் 1 ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டு காலம் பயிற்சி பெறுவார்கள்.

துவக்க கால பயிற்சி இந்தியாவிலேயே விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படும். அதற்குப்பின் வெளிநாடுகளில் பயிற்சி வழங்கப்படும்.

வெளிநாடுகளில் அளிக்கப்படும் பயிற்சியை இந்தியாவிலேயே வழங்குவதற்கு தேவையான வசதிகளை உருவாக்க போதுமான கால அவகாசம் இல்லை அதனால் வெளிநாட்டிலேயே பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என டாக்டர் சிவன் தெரிவித்தார்.

சந்திரனுக்கு. விண்வெளி வீரர்களை அனுப்பும் பணியினையும் விரைவில் இந்தியா மேற்கொள்ளும். அதன் மூலம் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

ஜிஎஸ்எல்வி எம் 3 ராக்கெட்டில் இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வார்கள்.

இந்த விண்வெளி பயண காலம் 7 நாட்களாக இருக்கும். 300 முதல் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் வானில் சுற்றி வருவார்கள் என டாக்டர் சிவன் கூறினார்.