24 மணி நேரமும் கடைகள், வணிக வளாகங்களை திறக்கலாம்! – தமிழரசு அரசாணை! – AanthaiReporter.Com

24 மணி நேரமும் கடைகள், வணிக வளாகங்களை திறக்கலாம்! – தமிழரசு அரசாணை!

நம்ம தமிழ்நாட்டில்  24 மணி நேரமும் கடைகள், வணிக வளாகங்களைத் திறக்கலாம் என்று அனுமதி அளித்து இன்று (ஜூன் 6) தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதை அடுத்து கலவையான க்மெண்ட்டுகள் ஆன் லைனில் கலந்து கட்டி உலா வருகிறது.

தமிழகத்தில் தற்போது வரை ஐடி நிறுவனங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட சில கடைகள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே இரவு நேரங்களிலும், அதாவது 24 மணி நேரமும் இயங்கி வந்தன. ஹோட் டல்கள், வணிக நோக்கிலான கடைகள் திறந்திருக்க அனுமதி இல்லை. இரவு 10 மணிக்கு மேல் சென்னை உட்பட சில மாநகரங்களில் 10 அல்லது 11 மணிக்கு முன்பாகவே கடைகள் அடைக்கப் படுவதால், வேலைக்குச் சென்று வருபவர்கள் இரவு நேரங்களில் ஹோட்டல்களை தேடி அலைவதையும் காண முடியும். இதுபோன்று சில அத்தியாவசிய பொருட்களும் வாங்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.

இந்த சூழலில், வணிகர் சங்கத்தினர் தமிழக அரசிடம் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, சில நிபந்தனைகளுடன் 24*7 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அடுத்த 3 ஆண்டுகளுக்குக் கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு பணியாளர்களுக்கும் சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு ஷாப்ஸ் அண்ட் எஷ்டாபிளிஸ்மெண்ட் விதிமுறைப்படி பணியாளர்களின் விவரங்களை அனைவரது பார்வையிலும் படும்படி வைக்க வேண்டும்.

ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அல்லது வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். கூடுதல் நேரம் வேலை பார்த்தால் அதற்கான ஊதியத்தையும் வழங்க வேண்டும். அவ்வாறு கூடுதல் நேரத்தையும் சேர்த்தால் ஒரு நாளைக்கு 10.30 மணி நேரம், அல்லது வாரத்திற்கு 57 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

அதே வேளை, அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாகவோ, விடுமுறை நாட்களிலோ பணியாளர்கள் பணியில் அமர்த்தினால் குற்றமாகும். அவ்வாறு பணியில் ஈடுபடுத்தும் மேலாளர்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண் பணியாளர்களை இரவு 8 மணிக்கு மேல் பணியில் அமர்த்த கூடாது. வேண்டுமெனில் அவர்களது எழுத்துப்பூர்வ சம்மதத்துடன் 8 மணிக்கு மேல் பணியில் அமர்த்தலாம். இரவு 8 மணிக்கு மேல் காலை 6 மணி வரை பணிக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பணியாளர்களுக்குப் போக்குவரத்து வசதி, கழிவறை, ஓய்வறை என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.