கோமதி மாரிமுத்து தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தினாரா? – AanthaiReporter.Com

கோமதி மாரிமுத்து தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தினாரா?

அண்மையில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியதாகத் தகவல் வெளியான நிலையில். கோமதி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன்  இப்படி குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் தமிழக வீராங்கனைகளுக்கு ஆதரவாக நிற்பதில் தேசிய தடகள சம்மேளனம் பாரபட்சம் காட்டுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தோஹாவில் கடந்த மாதம் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றிருந்தார். இந்த நிலையில், போட்டியின்போது மேற்கொள்ள முதற்கட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டதாக தெரியவந்துள்ளது என பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டாவது கட்ட ஊக்க மருந்து சோதனையிலும் உறுதி செய்யப்பட்டால், கோமதியிடம் இருந்து தங்கப்பதக்கம் பறிக்கப்படுவதுடன், 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து சோதனையில் கோமதிக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டிருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட சோதனையிலும் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்கொண்டது தெரியவந்ததாகவும், ஆனால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அந்த தகவலை வெளியிடவில்லை கூறப்படுகிறது. இந்த தகவலை தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை எதற்காக தங்களிடம் தெரிவிக்கவில்லை என்பது புரியவில்லை என இந்திய தடகள சம்மேளன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அதிகாரியை தொடர்பு கொண்டபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஆசிய தடகளப் போட்டியில் தங்க‌ம் வென்ற கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து எடுக்கவில்லை‌ என்‌றும், வேண்டுமென்றே சூழ்‌ச்சி ‌செய்து குற்றம் சாட்டப்படுவதா‌க அவரது சகோதரர் சுப்பிரமணி தெரிவிச்சார்.

ஆக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதியுள்ள வீராங்கனைகளில் ஒருவரான கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து சர்ச்சை குறித்த தகவலை செய்தித்தாள்களில் பார்த்தே தெரிந்து கொண்டேன் என கூறியுள்ளதற்கு பின்னால், அவர் ஏமாற்றப்படுகிறாரா என்கிற கேள்விக்கான விளக்கத்தை தடகள சம்மேளனமும், விளையாட்டு ஆணையமும் தெரியப்படுத்தாது ஏன் என்ற கேள்வி எழுகிறது.