கால அவகாசம் கொடுத்தும் ரிஜிஸ்டர் செய்யாத கிளினிக், நர்சிங்ஹோம்களுக்கு சீல்! – AanthaiReporter.Com

கால அவகாசம் கொடுத்தும் ரிஜிஸ்டர் செய்யாத கிளினிக், நர்சிங்ஹோம்களுக்கு சீல்!

சென்னை உள்ளிட்ட தமிழகத்தில், மருத்துவ சேவைகள் இயக்குனரகத்தின் 3 குழுக்கள்  அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. அதில் பதிவு செய்யப்படாத மருத்துவமனைகள், கிளினிக் குகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை இழுத்து மூடப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். பதிவு செய்யும் மருத்துவமனைக்கு 5 ஆண்டுகளுக்கு உரிமம் கிடைக்கும். என தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இயங்கிவரும் அனைத்து மருத்துவம் சார்ந்த நிறுவனங்களும், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 2018-ன் கீழ் மருத்துவமனை குறித்து கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் சுகாதாரத்துறையில் முறையாகப் பதிவு செய்யாத மருத்துவமனைகள், கிளினிக்குகள், நர்சிங் ஹோம்களை இழுத்து மூடும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும் கிளீனிக்குகளும் சிறிய அளவிலான மருத்துவ மையங்களும் செயல்படுகின்றன. அவற்றில் பல மருத்துவமனைகள் பதிவு உரிமம் இன்றி இயங்கி வருகின்றன. இதையடுத்து அவற்றை முறைப்படுத்தி உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான கால அவகாசம் அளிக்கப்பட்டு தற்போது அது நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுவரை 18 ஆயிரம் மருத்துவமனைகள், கிளீனிக்குகள் மட்டுமே பதிவு உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளன.

ஏறத்தாழ 52 ஆயிரம் மருத்துவமனைகள் அதற்கான எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. மே 31 வரை அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன் பிறகும் மருத்துவமனைகள் பதிவு செய்யப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

அதன்படி, பல விதிமுறைகள் உள்ளன. அதில், போதிய இடவசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பிடம், ஒவ்வொரு பிரிவுக்கும் தேவை யான ஊழியர்கள் இருத்தல் வேண்டும். கிராமப் புறங்களில் இருக்கும் ஆய்வகங்கள் 500 சதுர அடி பரப்பிலும், நகர்ப் புறங்களில் இருக்கும் ஆய்வகங்கள் 700 முதல் ஆயிரத்து 500 சதுர அடி பரப்பிலும் இருப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது