AanthaiReporter.Com

நம்ம தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையே அலாதியானது. பெரும்பாலானோருக்கு பிடித்த படத்தை மொக்கை என்று சொல்லி அதற்கான தன் தரப்பு நியாயத்தை சொல்லும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் அதிகரித்து விட்டது. முன்னொரு காலத்தில் ஒரு சினிமாவின் கதையை மட்டும் எடுத்து கொண்டு அதை சொன்ன விதம் குறித்து பேசிய ரசிக வட்டாரம் இப்போது ஒரு காட்சியில் நாயகி போட்டிருக்கும் ட்ரஸ் மிக அருமை ஆனால் அந்த லொகேசன் சரியில்லை என்றெல்லாம் சொல்லி சிலாகிக்கிறார்கள். மேலும் சில பல கோடி ரூபாயை முதலீடு செய்து ஒரு பெரும் குழு மாசக்கணக்கில் குழுவாகக் கூடி பேசி இணைந்து ஒரு சினிமா எடுப்பார்கள். ஆனால், அதை ஆரம்ப நாளில் பார்க்கும் ஒருவர் ஒற்றை சொல்லால் அந்தப் படத்தைக் காலி செய்து விட்டு போய் கொண்டே இருப்பார். கவிஞர் மகுடேஸ்வரன் குறிபிட்டது போல் ‘அத்தகைய ‘சினிமாப் பண்டிதர்கள்’ கோடம்பாக்கம் எங்கும் ஏராளமாக இருக்கின்றார்கள். அவர்கள் பழைய பத்திரிகையாளர்களாக இருப்பார்கள், முன்னாள் திரைப்பட முயற்சியாளர்களாக இருப்பார்கள், தோற்றுப் போன திரைப்படக்காரராக இருப்பார்கள், ஆக்க வழியில் எதையும் கிள்ளிப்போடாத வாய்ச் சொல் வீரர்களாக இருப்பார்கள். நல்ல விதமாக ஒரு சொல்லைச் சொல்வதற்கு எப்போதுமே முன் வராதவர்கள் அவர்கள். ஆனால், ஒரேயொரு சொல்லால் ஒரு படத்துக்கு எண்ட் கார்ட் போட்டு விடுவார்கள். அதே சமயம் சில உண்மையான மொக்கைப் படங்களை ஆஹா.. ஓஹோ என்று சொல்வோரும் கோலிவுட்டில் அதிகரித்து விட்டார்கள்”என்று எப்போதோ, சொன்ன கமெண்ட் இன்றும் மாறவில்லை. அப்படியான சூழலில்தான் நேற்று வெளியாகியுள்ளது சிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’.