இதுவரை அங்கீகாரம் பெறாமல் உள்ள 760 நர்சரி பள்ளிகளை மூடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழ்நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் தொடக்கக் கல்வி இயக்குனரகத்திலும், மெட்ரிகுலேசன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மெட்ரிக் கல்வி இயக்குனரிடத்திலும் அங்கீகாரம் பெற்று வருகின்றன. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்தபிறகு இந்த அங்கீகாரம் அளிக்கப்படுவது வழக்கம்.

தற்போது கல்வித் துறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஆய்வில், முறையாக அங்கீகாரம் பெறாமல் தமிழகத்தில் 760 நர்சரி பள்ளிகள் செயல்படுவது தெரிய வந்துள்ளது. தமிழக அரசு சார்பில், அந்தப் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகளின் பரப்பு, கட்டடத்தின் தன்மை, தீ பாதுகாப்பு, சுகாதாரத் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் போன்றவற்றில் ஏற்பட்ட பிரச்சினைகளினால் 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் சிக்கின. இதையடுத்து, இதுவரையிலும் அங்கீகாரத்தைப் புதுப்பிக்காமல் உள்ள 760 பள்ளிகளை மூடுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகபட்சமாகத் திருப்பூரில் 86 பள்ளிகளும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 55 பள்ளிகளும் முறையாக அங்கீகாரம் பெறாமல் உள்ளன.

அதேநேரத்தில், அங்கீகாரத்தைப் புதுப்பிக்காமல் உள்ள பள்ளிகளுக்குக் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் அங்கீகாரம் பெறவில்லை என்றால், அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள் இந்த மாத இறுதியில் மூடப்படும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பிரைமரி நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார், அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளை மூடுவது குறித்து ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார். “அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ள 760 நர்சரி பள்ளிகளில் அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அரசுப் பள்ளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் நடத்தப்படுகிறது. ஆனால் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது இழுத்தடிக்கப்படுகிறது. 760 நர்சரி பள்ளிகளில் தரமான பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும். மெட்ரிகுலேசன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு கட்டட அனுமதி தர வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அரசு இன்னும் தெளிவான நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கூறினார். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டால் அங்கீகாரம் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று தன் பேச்சில் குறிப்பிட்டார்.

error: Content is protected !!