இதுவரை 3,399.33 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்! – தேர்தல் கமிஷன் தகவல்!! – AanthaiReporter.Com

இதுவரை 3,399.33 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்! – தேர்தல் கமிஷன் தகவல்!!

நாடு முழுவதும் இதுவரை 3,399.33 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டிருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 949.03 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு முதலிடம் வகிக்கிறது.

மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், ”தேர்தலில் முறை கேடுகளை தடுக்கும் வகையில், நாடுமுழுக்க கணக்கில் வராத பணம் மற்றும் பொருட்களை கண்டுபிடிக்க பறக்கும் படைகள் அதிரடி சோதனைகள் நடத்தின. இதில், இந்தியா முழுக்க இதுவரை மொத்தம் 3,399.33 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.” என்றார்.

இதில் டெல்லியில் மட்டும் 420.94 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 949.03 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு முதலிடம் வகிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது தேர்தல் கமிஷன். இதுவரை 5 கட்ட லோக்சபா தேர்தல்களே முடிந்துள்ளன. இன்னமும் 2 கட்டத் தேர்தல்கள் மீதி உள்ள நிலையில், இதுவரை பறிமுதல் ஆனவை தான் இவை.

தேர்தல் முடியும் வரை பறக்கும் படைகளின் சோதனைகள் தொடரும் என்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர். லோக்சபா தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தலைமைத் தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா இன்று காணொலி காட்சி வாயிலாக, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உட்பட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.ஓட்டு எண்ணும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை தலைமை தேர்தல் கமிஷனர் வழங்கினார்.