ராகுல் மீதான இரட்டை குடியுரிமை வழக்கை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்! – AanthaiReporter.Com

ராகுல் மீதான இரட்டை குடியுரிமை வழக்கை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!

ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்பதால் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்று இரட்டை குடியுரிமை சர்ச்சையைக் கிளப்பி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு போட்டியிட தடை விதிக்கக்கோரிய மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இன்று அதை தள்ளுபடி செய்து விட்டது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது பிரிட்டன் நாட்டில் உள்ள நிறுவனத்தில் சில முதலீடுகளை செய்திருப்பதாக தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். பிரிட்டன் குடிமகன் என்ற முறையில் அவர் அந்த முதலீட்டை செய்ததாக எதிர்க்கட்சிகள் அப்போது சுட்டிக்காட்டி இருந்தன. மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ராகுல் காந்தியின் பட்டமளிப்பு சான்றிதழில் அவரது பெயர் ’ராகுல் வின்சி’ என்ற இத்தாலிய துணைப்பெயருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது நடைபெறும் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான துருவ் லால் என்பவர், பிரிட்டன் குடிமகனான ராகுல் காந்தி நம் நாட்டு தேர்தலில் எப்படி போட்டியிடலாம்? என்று அந்த தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார்.

இதே இரட்டை குடியுரிமை விவகாரத்தை முன்வைத்து பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி புகாரளித்திருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பான நிலைப்பாட்டை 15 நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும் என ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.

ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதால் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் 2 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்தி மீதான இரட்டை குடியுரிமை வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.