தமிழகத்தில் கட்டணமில்லா கழிப்பறை விவகாரத்தில் டெல்லியில் உள்ள நடைமுறையைப் பின்பற்றச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

கரூரைச் சேர்ந்த சரவணன் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளில் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் அமைத்துத் தரப்படவில்லை’ என்று குற்றம்சாட்டியிருந்தார். பெரும்பாலான இடங்களில் உள்ள கழிப்பறைகளுக்கு ரூ.10 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், கோயில்கள் எனப் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரமான இலவச கழிப்பறைகளைக் கட்டித் தர உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ள சரவணன், குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி, திருப்பதி போன்ற நகரங்களில் உயர்தரத்துடன் இலவச கழிப்பறைகள் உள்ளது போல் தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் இலவச கழிப்பறைகள் கட்ட உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனுவை நேற்று (ஏப்ரல் 25) விசாரித்த நீதிமன்றம், கட்டணமில்லா கழிப்பறை விவகாரத்தில் டெல்லி நடைமுறையைப் பின்பற்றுமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. “டெல்லியில் பொதுக் கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்காமல் தனியார் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை, கழிப்பறை மேம்பாட்டுக்காகப் பயன்படுத்துகின்றனர். அந்த நடைமுறையை இங்கும் பின்பற்றலாம்” என்று தெரிவித்துள்ளது

மேலும், “ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து, டெல்லி சென்று அங்குள்ள இலவச கழிப்பிடங்களை ஆய்வு செய்து, அதைத் தமிழகத்தில் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!