பாஜக வேட்பாளர்கள் (தமிழகம் உள்ளிட்ட) முதல் பட்டியல் ரிலீஸ்! – AanthaiReporter.Com

பாஜக வேட்பாளர்கள் (தமிழகம் உள்ளிட்ட) முதல் பட்டியல் ரிலீஸ்!

நேற்றைய தினமே தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இதுதான் என்று எச். ராஜா பக்காவாக பேட்டி அளித்த ஒரு மனி நேரத்தில் அய்யய்யோ அப்பட்டியல் அதிகாரபூர்வமற்றது என்று அதே ராஜா அறிவித்த நிலையில் சற்று முன் பாஜக தலைமை அதிகாரபூர்வமாக பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் எச். ராஜா சொன்னப்படியே தமிழக பாஜக வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய தேர்தல் குழு இன்று நான்கு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்தது. அதிலும் பாஜக மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் கடந்த 5 நாட்களில் மூன்றாவது முறையாக இன்று நடந்ததாக்கும்.இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா மற்றும் முக்கிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்ட முடிவில் 20 மாநிலங்களுக்கு வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்திற்கு மட்டும் முழுமையாக 17 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் 184 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலில் இடம் பெற்ற முக்கியத் தலைவர்களும் அவர்களுக்கான தொகுதிகளும் வருமாறு:

வாரணாசி தொகுதியில் மீண்டும் பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார்.

லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார்.

நாக்பூரில் நிதின் கட்கரி போட்டியிடுகிறார்.

காசியாபாத் தொகுதியில் வி.கே. சிங் போட்டியிடுகிறார்

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.

தமிழ்நாடு வேட்பாளர்கள் அறிவிப்பு

தூத்துக்குடியில் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுகிறார்.

கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார்.

கோவை தொகுதியில் சி.பி. இராதாகிருஷ்ணன் களம் இறங்குகிறார்.

ராமநாதபுரத்தில் அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு வந்த நைனார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.

சிவகங்கை தொகுதியில் பாஜக செயலாளர் ஹெச். ராஜா போட்டியிடுகிறார்.

மேலும் நாளை மார்ச் 22ஆம் தேதி-வெள்ளிக்கிழமை மீண்டும் பாஜக மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. மீதம் உள்ள உத்தரப் பிரதேசம் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான தொகுதிகள் குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.