சிலைக் கடத்தல் : இந்து அற நிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது! – AanthaiReporter.Com

சிலைக் கடத்தல் : இந்து அற நிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது!

நம் நாட்டில் சுமார் 70 லட்சம் சிலைகள் உள்ளன. இதில் சுமார் 13 லட்சம் பொருள்களுக்கு மட்டுமே முறையான ஆவணப் பதிவு உள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டுமே இந்தியாவுக்குச் சொந்தமான சிலைகள் உள்ளிட்ட 4,408 கலைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை சொல்கிறது. தமிழகத்தில் உள்ள 37,000 கோவில்களில் கிட்டத்தட்ட 4.3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன என்று இந்து அறநிலையத் துறை விவரம் கூறியுள்ளது. இதில் கணக்கிடப்படாத சிலைகள் இன்னும் ஏராளம். சமீப காலமாக இந்த சிலைத் திருட்டு வழக்கு அன்றாடம் ஏதாவதொரு செய்தி வெளியாகி மறு நாளே மறந்து விடுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் இந்து அற நிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

நம் தமிழகத்தில் பராமரிக்கப்படாத கோவில்களில் உள்ள பஞ்சலோக சிலைகள், ஐம்பொன் மற்றும் கலைநயம் மிக்க சிலைகள் கோடிக்கணக்கிலான ரூபாய் மதிப்பில், கள்ளச் சந்தைகளில் விற்கப்படுகின்றன. இதனிடையே காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. இச்சிலையில் சிதிலம் ஏற்பட்டதால், அறநிலையத் துறை சார்பில் புதிய சிலை செய்யப்பட்டது.

அப்படி புதிய சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக பொதுமக்களும், சிவபக்தர்களும் புகார் அளித்தனர். அதன்பேரில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி, புதிதாகச் செய்யப்பட்ட சிலையில் தங்கம் இல்லை என தெரிவித்தது. இது தொடர்பாக, 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைது செய்யப் பட்டுள்ளார்.  காஞ்சி சோமாஸ்கந்தர் கோயில் சிலை மோசடி புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.