தமிழகத்தை சேர்ந்த சவுமியா சுவாமிநாதன் :உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியானார்!

தமிழகத்தை சேர்ந்த சவுமியா சுவாமிநாதன் :உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியானார்!

ஐக்கிய நாடுகளின் கீழ் சார்பில் இயங்கும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக தமிழகத்தை சேர்ந்த சவுமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய பசுமை புரட்சியின் தந்தையான எம்.எஸ். சுவாமிநாதன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் துணை டைரக்டர் ஜெனரலாக சவுமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தலைமை விஞ்ஞானி பதவியில் தற்போது சவுமியா சுவாமிநாதன் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையின் கீழ் தனி பிரிவு செயல்படவுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியிசஸ் மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த புதிய விஞ்ஞானிகள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பதவியை ஏற்றது மூலம் உலக சுகாதார நிறுவனத்தின் இரண்டாவது அதிகாரமிக்க பதவியை சவுமியா இழந்துவிட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சவுமியா சுவாமிநாதன் மறுத்துள்ளார்.

தலைமை விஞ்ஞானி பதவியில் இருந்தாலும் தன்னிடம் துணை டைரக்டர் ஜெனரலுக்கான அதிகாரமும் இருக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பதவி உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் பதவிக்கு இணையானது என சவுமியா சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சவுமியாவின் நியமனம் குறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் ஆப்பரிக்கா பிராந்திய இயக்குனர் திஷிதி மொய்டி ‘‘அறிவியல் இன்று வேகமாக மாறி கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில் உலக சுகாதார நிறுவனம் அந்த மாற்றத்திற்கு இணையாக செயல்படாமல் அதை விட ஒரு அடி முன்னே நிற்க வேண்டும். இனி உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியின் கீழ் உலக சுகாதார நிறுவனம் அனைத்து நவீன அறிவியல் மேம்பாடுகளின் உச்சத்தில் இருக்கும். அந்த அறிவியல் மேம்பாடுகள் அளிக்கும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி உலக சுகாதாரத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை கண்டறிவோம்’’ என திஷிதி மொய்டி தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!