போதும்.. மிஸ்டர் மோடி! வாயை திறங்கோ! 637 கல்வியாளர்கள் பகிங்கர கடிதம்.. – AanthaiReporter.Com

போதும்.. மிஸ்டர் மோடி! வாயை திறங்கோ! 637 கல்வியாளர்கள் பகிங்கர கடிதம்..

நாட்டின் வடகோடியில் உள்ள கடவுளின் உறைவிடம் என்று சொல்லப்ப்படும் காஷ்மீரில் சிறுமி ஒருவர் 8 நபர்களால் வன் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய குற்ற வாளிகளைக் கைது செய்யக்கூடாது எனக் கூறி காஷ்மீரில் பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர். இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவோ நகரில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த இருசம்பவங்களும் பா.ஜ.க-வுக்கு கடும் நெருக்க டியை ஏற்படுத்தி யுள்ளது. அக்கட்சியின் மீது அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கும் நிலையில் தன் கட்சி நிர்வாகிகளுக்கு மோடி வழங்கிய அட்வைசின் போது, ‘தொடர்ந்து தேவையில்லாத கருத்துகளைப் பேசிவருவது ஊடங்கங் களுக்கு மசாலா அளிப்பது போல் ஆகிவிடுகிறது. எந்த விஷயத்தையும் முழுமையாக அறியாமல் ஊடகங்கள் முன்பு ஏதோ சமூக விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் போல் நீங்கள் பேசுவது விமர்சனத்தை உண்டுபண்ணுகிறது. இதனால் கட்சி, ஆட்சியின் புகழுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆர்வக்கோளாறில் கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்’ என்று சொல்லி இருந்தார். இதனிடையே பாரத தேசத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வாய் திறக்க ஏன் இன்னும் மறுக்கிறீர்கள்..? உங்கள் நாடகத்தை கலைத்து விட்டு கருத்துக்களை முன்வையுங்கள் என்றும் உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு பகிங்கர கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இந்தியாவில் தலித்துக்கள், பழங் குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர் கதையாகி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இவற்றை தடுக்க பிரதமர் மோடி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி யுள்ளனர். சர்வதேச புகழ்பெற்ற 637 கல்லூரி களில் இருந்து கல்வியாளர்கள் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். இதில் 200-க்கும் அதிகமான கடிதங்கள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டனில் பணியாற்றும் கல்வியாளர்கள் எழுதியதாகும். 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

“காஷ்மீரில் ஒரு சிறுமி, கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே 17 வயதுச் சிறுமியை வல்லுறவுக்கு உள்ளாக்கி இருக்கிறார். ஆனால்,இதுபோன்ற சம்பவங்களில் நீங்கள் மவுனம் காத்து வருகிறீர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று உறுதியளிக்கவும் இதுவரை நீங்கள் முன் வரவில்லை. இது கண்டனத்திற்கு உரியது” என்று கல்வியாளர்கள் தங்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், “நீங்கள் (பிரதமர்) பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த விஷயத்திற்கும் குரல் கொடுப்பதில்லை; முக்கியமாக உங்கள் கட்சியினர் செய்யும் குற்றம் பற்றி எதுவும் பேசுவதில்லை; நீங்கள் கடைசியாக காஷ்மீர் சம்பவத்தை கண்டித்தது கூட மயில் இறகால் வருடியது போல மென்மையாகவே இருந்தது. நீங்கள் இப்படி அமைதியாக செயலற்று இருப்பது நம்முடைய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கும்” என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்

.பாஜக ஆளும் மாநிலங்களில்தான், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடை பெறுவதாக கூறியுள்ள கல்வியாளர்கள், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பாஜக அரசுகள் நேரடியாக வன் முறையில் ஈடுபடவில்லை என்றாலும், வன்முறையில் ஈடுபடுவோர் பாஜக-வுடன் தொடர்புடையவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 49 பேர், மோடியின் மவுனத்தைகண்டித்து ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் 600-க்கும் மேற்பட்ட கல்வியாளர்களும் பிரதமர் மோடிக்கு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது