காஷ்மீர் கத்துவா சிறுமி கொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு! – AanthaiReporter.Com

காஷ்மீர் கத்துவா சிறுமி கொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

ஜம்மு -காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் கடந்த ஜனவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து கண்டறியப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை யில், அந்த சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தியாவை உலுக்கிய இந்த பாலியல் கொடூர விவகாரத்தில் 8 பேர் மீது குற்றம் சுமத்தப் பட்டது. அதன்பிறகு நடந்த விசாரணையில், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து நான்கு நாள்கள் அடைத்து வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததும், அதன்பிறகு சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. இந்தக் குற்றவாளிகளை போலீஸ் காப்பாற்ற முயல்வதாக தகவல் தெரியவரவே, நாடெங்கும் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், காஷ்மீரில் வழக்கு நடந்தால் தங்களுக்கு உரிய நீதி கிடைக்காது. எனவே, இந்த வழக்கை சண்டிகருக்கு மாற்றும்படி சிறுமியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள நீதி மன்றத்துக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர். மேலும், விசாரணை நடைபெறும்போது அதை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணை ஜூன் 3-ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பை ஜூன் 10-ம் தேதிக்கு நீதிபதி தேஜ்விந்தீர் சிங் (Tejwinder Singh) ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 8 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இவர்களுக்குரிய அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

6 குற்றவாளிகளின் விவரம் :

*முக்கிய குற்றவாளியான, ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அலுவலரும் கிராம தலைவருமான சஞ்சி ராம்,

*சஞ்சி ராம் அவர்களின் நண்பர் பர்வேஷ் குமார்,

*சஞ்சி ராமிடம் இருந்து ரூ 4 லட்சத்தை பெற்று கொண்டு ஆதாரங்களை அழித்த தலைமை காவலர் திலக் ராஜ்

*இவ்வழக்கின் மீது விசாரணை நடத்திய உதவி ஆய்வாளர் எஸ்.ஐ ஆனந்த் தத்தா , இரண்டு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் தீபக் கஜுரியா மற்றும் சுரேந்தர் வர்மா