கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.1146 கோடி நிதி ஒதுக்கீடு! – AanthaiReporter.Com

கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.1146 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தை பெரும் பாதிப்புக்குளாக்கிய கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.1146 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை சமீபத்தில் தாக்கிய கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பு அடைந்தன. ஏராளமான வீடுகள், தென்னை மரங்கள் சேதம் அடைந்தன. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பின்னர் மத்திய அரசின் சார்பாக ஆய்வுக் குழுவினர் தமிழகம் வந்து பாதிப்புகளை பார்வையிட்டு, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதனிடையே தமிழக அரசின் தரப்பில் இருந்து முதல்கட்டமாக ரூ.1000 கோடியை விடுவித்து முதல்வர் உத்தரவிட்டார்., அத்துடன பல்வேறு வகையான நிவாரண உதவிகளும் அறிவிக்கப் பட்டன.

இந்நிலையில் தமிழகத்தை பெரும் பாதிப்புக்குளாக்கிய கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.1146 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் திங்கள் கிழமையன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த உயர் மட்டக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் கட்டமாக ரூ.1146 கோடியே 12 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளதாகத் தெரிகிறது.

அட்சினல் ரிப்போர்ட்:

கடந்த2016-ம் ஆண்டில் தமிழகத்தை தாக்கிய வர்தா புயலுக்காக தமிழக அரசு ரூ.22,573 கோடி கோரியது. ஆனால், கிடைத்தது ரூ.266.17 கோடி மட்டும் தான். இது கிட்டத்தட்ட ஒரு விழுக்காடு மட்டுமே.

2017-ம் ஆண்டு வறட்சிக்காக தமிழக அரசு கோரியது ரூ.39,565 கோடி. ஆனால், கிடைத்தது ரூ.1748 கோடி தான். இது தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 4 விழுக்காடு மட்டும் தான்.

2017-ம் ஆண்டில் ஒக்கி புயல் பாதிப்புகளுக்காக தமிழக அரசு கோரியது ரூ.9,300 கோடி. ஆனால் கிடைத்தது ரூ.133 கோடி மட்டும் தான். இது 1.5% நிவாரண உதவி மட்டுமே.