உங்க மொபைலில் ஆர்.சி, புக் & டிரைவிங் லைசென்ஸ் இருக்கா? – AanthaiReporter.Com

உங்க மொபைலில் ஆர்.சி, புக் & டிரைவிங் லைசென்ஸ் இருக்கா?

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக செல்லுதல் உள்ளிட்ட 6 போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் ஒரிஜினல் லைசென்சை கட்டாயம் காட்ட வேண்டும் என்று போலீசார் தெரிவித்து இருந்த நிலையில்  ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் (ஆர்.சி. புத்தகம்) போன்ற ஆவணங்களை மொபைலில் சரி பார்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

அண்மையில் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புத்தகம் போன்ற ஆவணங்களை மின்னணு வடிவில் ஏற்றுக் கொள்வதற்கு வழிவகை செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் தங்களது ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புத்தகம், காப்பீடு போன்ற ஆவணங்களை டிஜிலாக்கர், எம் பரிவகான் போன்ற செயலிகள் வாயிலாகவும் காட்டலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளோ இ-சலான் செயலியை பயன்படுத்தி விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம். இந்த செயலியில் ஆன்லைன் வாகன சரிபார்ப்பு மற்றும் உரிமத்தின் நிலை பற்றிய விவரங்கள் உள்ளன.

காகித ஆவணங்களின் பயன்பாட்டைக் கைவிடும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதன் விளைவாக, அதிகாரிகளால் ஆவணங்கள் பறிக்கப்படுவதிலிருந்து வாகன ஓட்டி களுக்கு நிவாரணமும் கிடைக்கும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையில், “இந்த நடவடிக்கையால் மக்கள், அரசு அதிகாரிகள் இருதரப்பினருமே பயனடைவர். அதிகாரிகள் காகித ஆவணங்களை கையாளத் தேவையில்லாததோடு, அவர்களது அலுவலகங்கள் பதிவேடுகளையும் பராமரிக்கத் தேவை யில்லை”   என்று கூறப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் 1989இல் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.