ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி! – AanthaiReporter.Com

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி!

ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக் கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 11) நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னணி வகித்தாலும் இழுபறி நிலை உள்ளது. தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் வெற்றி பெறும் நிலையிலுள்ளன. ஆக ஐந்து மாவட்டங்களிலுமே பாஜக வெற்றிவாய்ப்பை தழுவக்கூடிய நிலையில் இல்லை.

தேர்தல் நிலவரம் குறித்து பல தலைவர்களும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். மேற்கு வங்க முதல்வரான மம்தா பேனர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது மக்களின் தீர்ப்பு. இது நாட்டு மக்களின் வெற்றி. ஜனநாயகத்தின் வெற்றி. அனைத்து மாநிலங்களிலும் பாஜக தோற்றுப்போனதையே அரையிறுதி நிலவரம் காட்டுகிறது. 2019ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் இறுதி போட்டிக்கான உண்மையான ஜனநாயகக் குறியீடுதான் இது. ஜனநாயகத்தில் மக்களே ஆட்ட நாயகர்களாக உள்ளனர். வெற்றி பெற்றோருக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சத்தீஸ்கர், ராஜஸ்தான் & மத்தியப் பிரதேசத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திரு.ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வாழ்த்துகள். பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தவும், பெரிய கூட்டணியை பலப்படுத்துவும் இந்த தேர்தல் முடிவுகள் பயன்படும். தெலங்கானா தேர்தலில் வெற்றி பெற்ற திரு.சந்திரசேகர் ராவிற்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமரால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட #AccheDin இதோ இன்று வந்துவிட்டது. இந்த நாள் இனிய நாள்” என்று பதிவிட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவரான பூபேஷ் பகெல் பேசுகையில், “சத்தீஸ்கர் மக்கள் தங்களது கைகளால் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ராகுல் காந்திக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் மக்களுக்காக சண்டையிட்டோம். எதிர்பார்த்ததை விட நாங்கள் கூடுதல் தொகுதிகளை பெற்றுள்ளோம். யார் முதல்வராக பொறுப்பேற்பது என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசர், “மோடி அலை ஓய்ந்துவிட்டது. மோடி அலை கரையை கடப்பதற்கு முன்னாலேயே ஓய்ந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கு இழந்திருப்பதையே காட்டுகிறது” என்று கூறினார். தேர்தல் முடிவுகள் புதிய ஆரம்பத்தின் அடையாளம் என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த் கபில் சிபால் பேசுகையில், “இது ராகுல் காந்தி, எங்கள் கட்சி, உறுப்பினர்கள், மக்கள், ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின் வெற்றி. இது மனிதத்தின் வெற்றி” என்று பேசியுள்ளார்.

சத்தீஸ்கர் முதல்வரான ராமன் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். காங்கிரஸின் வெற்றிக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மக்களுக்கு சேவை செய்தது எனது அதிர்ஷ்டம் என கருதுகிறேன். தேர்தல் எனது தலைமையில் போட்டியிடப்பட்டதால் தோல்விக்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். பலமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு மாநிலத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றுவோம்” என்று கூறினார்.