மழை பெஞ்சா ஸ்கூலுக்கு லீவு இனி கிடையாது! – கல்வித் துறை கண்டிப்பு – AanthaiReporter.Com

மழை பெஞ்சா ஸ்கூலுக்கு லீவு இனி கிடையாது! – கல்வித் துறை கண்டிப்பு

கனமழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டு வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் கனமழை பெய்யும் பட்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகங் கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கின்றன. ஆனால், சாதாரண மழை நாட்களில் கூட பள்ளி களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பது தங்கள் கவனத்துக்கு வந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மழைக்காலங்களின் போது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் பல புதிய நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளி கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடும் வெள்ளச்சேதம் ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை அறிவிக்கக் கூடாது என கூறியுள்ளது.

சூழலைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதற்கு மூன்று மணி நேரம் முன்பே விடுமுறை அறிவிப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும் எனவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நிலைமையின் தீவிரத்தை ஆய்வு செய்து விடுமுறை அறிவிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் களுக்கு தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது.

விடுமுறை விடும்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விட வேண்டும் என்றும், ஒட்டு மொத்த வருவாய் மாவட்டத்திற்கும் விட வேண்டிய அவசியமில்லை என்றும் பள்ளி கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

கல்வி மாவட்ட அளவில் அல்லது உள்ளாட்சி பகுதி அளவுக்குக் கூட விடுமுறை விடலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. கோயில் திருவிழா உள்ளிட்ட இதர காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஈடு செய்யும் பணிநாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

விடுமுறை விடப்படும் நாட்களுக்கு சனிக்கிழமைகளில் ஈடு செய்ய வேண்டும் எனவும் எக்காரணம் கொண்டும் பாடத்திட்டம் பாதிக்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை விரைவாக திறக்க வேண்டும் என்றும் பள்ளிகளில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியிருந்தால் அதனை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. நிவாரண முகாம்கள் அமைக்க மற்ற இடங்களை ஆய்வு செய்யாமல் எடுத்த உடனேயே அரசுப்பள்ளிகள் நிவாரண முகாம்களாக தேர்வு செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை விமர்சித்துள்ளது.

இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் பள்ளி கல்வித்துறை கடிந்து கொண்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பினை வெளியிடுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.