AanthaiReporter.Com

இந்தியாவில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் வெறும் 62 சதவிகித நிறுவனங்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மத்திய பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, அக்டோபர் மாத இறுதி வரையில், இந்தியாவில் மொத்தம் 18.10 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், வெறும் 62 சதவிகிதம் அளவிலான நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கின்றன. மத்திய பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டுவரும், நிறுவனச் சட்டத்தின் கீழ் இந்நிறுவனங்கள் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகும். பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 6.46 லட்சம் நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக மூடப்பட்டவையாகும். மேலும், 39,736 நிறுவனங்கள் மூடப்படுவதற்கான செயல்முறையில் உள்ளன.

மூடப்பட்ட 4,46,882 நிறுவனங்களில் 10,574 நிறுவனங்கள் பங்குப் பிரிவு செய்யப்பட்டுள்ளன. 6,00,048 நிறுவனங்கள் அதிகாரபூர்வமாகவே செயலிழந்த நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 9,565 நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட கூட்டு நிறுவனங்களாக (LLP) மாற்றப்பட்டுள்ளன. தற்போது செயல்பாட்டில் இருக்கும் 11.16 லட்சம் நிறுவனங்களில் 11.09 லட்சம் நிறுவனங்கள் பங்கு அடிப்படையிலான நிறுவனங்களாகும். 64,547 நிறுவனங்கள் பொதுத் துறையைச் சேர்ந்தவையாகவும், 10,44,806 நிறுவனங்கள் தனியார் துறையைச் சேர்ந்தவையாகவும் இருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.