”ஜனநாயகத்தில் நியாயங்கள் நிராயுதபாணியாகி விட்டது” – AanthaiReporter.Com

”ஜனநாயகத்தில் நியாயங்கள் நிராயுதபாணியாகி விட்டது”

இலங்கை அதிபரின் அதிரடி உத்தரவால் சில மணி நேரத்துக்குமுன் நாடாளுமன்ற அவையின் தலைவராக (SPEAKER) *தினேஸ் குணரத்னேவை* நியமித்த உத்தரவினை பிறப்பித்து அவரும் நாடாளுமன்ற தலைவரின் அலுவலகத்தில் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். கரு ஜெயசூர்யா நீக்கப்டுகிறார். ஒரு மணி நேரத்தில் இந்த காட்சிகள் அரங்கேறுகின்றன.

இலங்கை அதிபரின் ஒரு உத்தரவால் பிரதமர், சபாநாயகர் நியமிக்கப்படுகிறார். இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதித்து ஒப்புதல் பெறவேண்டிய விடயங்களை அதிபர் மைத்ரிபால சிறிசேனே தன் கையில் எடுத்துக் கொண்டு தனது அதிபர் இல்லத்தில் நடக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் உலகில் இதுவரை நடந்ததில்லை. பிரதமரையோ, பேரவைத் தலைவரையோ நியமிக்க முடிவு செய்ய வேண்டிய இடம் நாடாளுமன்றம் தான்.

*மான்டெஸ்கியூ*வின் *அதிகாரப் பகிர்வு (Seperation of Powers)* கோட்பாட்டின்படி நாடாளுமன்றம், நீதிமன்றம், ஆட்சி அதிகாரங்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலைகளில் இயங்க வேண்டுமென்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பிரெஞ்சு 16ஆம் லூயியை போல சர்வாதிகாரப் போக்கில் இலங்கையை அதிபர் சிறிசேனே நானே அரசு என நடத்தி வருகிறார். இந்த விடயத்தில் அனைத்துலக நாடுகளும் எத்தகைய குரலும் எழுப்பாமல் ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படுவதை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவோ இது குறித்து எதுவும் பேசாமல் அது அயல்நாட்டு பிரச்சனை நாம் தலையிட முடியாது என்று கைவிரிக்கிறது. இது அயல்நாட்டு பிரச்சனை என்றால் திம்பு மாநாட்டினை ஏன் நடத்தவேண்டும். இந்தியா -இலங்கை ஒப்பந்த்தில் ஏன் கையொப்பம் இட வேண்டும்.இலங்கைக்கு *இந்திய அமைதிப் படையை (IPKF – India Peace Keeping Force)* எதற்காக அனுப்பியது, முள்ளிவாய்க்கால் பிரச்சனையில் இந்திய ராணுவத்தை ஏன் அனுப்பியது,. இப்போது மட்டும் அயல்நாட்டு பிரச்சனை என்பது வேடிக்கையாக இல்லையா? இப்போது இதற்காக குரல் கொடுக்காமல் மௌனம் சாதிப்பது எத்தகையது?

மைத்திரி தனது மாளிகையிலிருந்து நாடு கடந்த ஶ்ரீலங்கா அரசை நடத்துகிறார். அவரின் குயிக்டாஸிசம் அங்கு நடக்கிறது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.