ஆயுஷ்மான் பாரத் எனப் படும் மருத்துவ பாதுகாப்புத் திட்டம் – பிரதமர் தொடங்கி வைத்தார்!

ஆயுஷ்மான் பாரத் எனப் படும் மருத்துவ பாதுகாப்புத் திட்டம் – பிரதமர் தொடங்கி வைத்தார்!

நாடு முழுவதும் 50 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப் படும் மருத்துவ பாதுகாப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைத்தார்.  இந்த மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ஓராண்டுக்கு, ஒரு குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வரை ஆகும் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டின் எந்தவொரு மூலையில் இருக்கும் அரசு மருத்து வமனைகளிலோ, அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ பயனாளர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.

மத்திய அரசின் இந்த முன்னோடித் திட்டத்துக்கு, `பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பலனடைவார்கள். கடந்த 2011-ம் ஆண்டு சமூகப் பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் கிராமப்புறங்களில் 8.03 கோடி குடும்பங்களும், நகர்ப் புறங்களில் 2.33 கோடி குடும்பங்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படும். இதன் மூலம் சுமார் 50 கோடி பேர் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வயது வரம்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை வரம்பின்றி ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். சில மாநிலங்களில் `ராஷ்ட்ரிய ஸ்வஸ்தய பீமா யோஜனா’ என்ற பெயரில் ஏற்கெனவே மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தின் பயனாளிகள் அனைவரும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வருவார்கள்.

தமிழகத்தில் முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தை மத்திய அரசின் திட்டத் துடன் இணைத்து செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழகம் உட்பட 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசு திட்டத்தில் இணைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

தெலங்கானா, ஒடிசா, டெல்லி, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இதுவரை இதில் கையெழுத்து இட வில்லை. எனவே இந்த மாநிலங்கள் நீங்கலாக பிற மாநிலங்களில் இத்திட்டம் செயல்பாட் டுக்கு வருகிறது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உள்ள நிலையில், அடுத்த 2 மாதங்களில் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது.

இத்திட்டத்தில் பலனடைய ஆதார் அட்டை கட்டாயமில்லை. ஆதார் அட்டை இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவை மூலம் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தலாம். ஒருவர் சிகிச்சைக்காக மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவரது குடும்பத்தினர் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. புற்றுநோய் அறுவை சிகிச்சை, ரேடியேஷன் தெரபி, கீமோ தெரபி, இதய அறுவை சிகிச்சை, நரம்பு அறுவை சிகிச்சை, தண்டுவடம், பல், கண் அறுவை சிசிச்சை என 1,350 சிகிச்சைகளை இத்திட்டம் கொண்டுள்ளது.

தேசிய சுகாதார ஏஜென்சி (என்.எச்.ஏ.) இந்த திட்டத்துக்கு என இணைய தளமும் (mera.pmjay.gov.in ) ஹெல்ப் லைன் வசதியும் (14555) ஏற்படுத்தியுள்ளது. இவற்றின் மூலம் ஒருவர் இத்திட்டத்தின் பயனாளியா என்பதை பரிசோதித்துக் கொள்ள முடியும். தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அவர் இன்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் முதன்மை வடிவமைப்பாளரான நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறும் போது, “அரசால் செயல்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் இதுவாகும். பிரதமர் மோடி தற்போது தொடங்கி வைத்தாலும் பண்டிட் தீனதயாளு உபாத்யாய பிறந்த நாளான செப்டம்பர் 25–-ம் தேதி இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும். 15 ஆயிரம் மருத்துவமனைகள் இதில் தங்களை இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன.நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.3,500 கோடி செலவாகும். இதற்கு ஏற்கெனவே நிகழாண்டு பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டச் செலவில் 60 சதவீதத்தை மத்திய அரசும் 40 சதவீதத்தை மாநில அரசுகளும் ஏற்கும்” என்று தெரிவித்தார்.

 

Related Posts

error: Content is protected !!