தயிர் ஊட்டச்சத்துன்னு தெரியும் : ஆனா தயிர் இதயத்துக்கும் நல்லது தெரியுமா? – AanthaiReporter.Com

தயிர் ஊட்டச்சத்துன்னு தெரியும் : ஆனா தயிர் இதயத்துக்கும் நல்லது தெரியுமா?

தயிர் உணவின் ஒரு முக்கிய அங்கம். என்னதான் சாப்பிட்டாலும் கடைசியில் தயிர்சாதமோ, மோர் சாதமோ சாப்பிட்டால் தான் வயிறு நிறைந்தது போல் இருக்கும்! வாடா இந்தியர்களுக்கோ தயிர் இல்லாமல் பரத்தா சாப்பிடுவது மிகக் கடினம்! அற்புதமான சுவை கொண்ட தயிர் உடலுக்குத் தரும் பல நன்மைகளும் உள்ளன. அப்படியே சாப்பிட்டாலும் சரி உணவில் சேர்த்துக் கொண்டாலும் சரி தயிர் உங்கள் உடலுக்கு பலப்பல நன்மைகளை அளிக்கும்.

மேலும் தயிர் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிரம்பியது, இந்த ஊட்டச்சத்துகள் சாப்பிட்ட உடனே விரைவில் செரிமான மண்டலத்தால் உறிஞ்சிக்கொள்ளப்படும். நாம் சாப்பிடும் பிற உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துகளை உடல் கிரகித்துக்கொள்ளவும் தயிர் உதவுகிறது. பெப்டிக் அல்சர், ஹெலிகோபாக்டர் பைலோரி நோய்த்தொற்று போன்ற பிரச்சனைகள் சரியாகவும் தயிர் உதவக் கூடும் என்று ஆய்வுகள் கூறிய நிலையில் அன்றாட உணவில் நாம் தயிர் அதிகம் சேர்த்துக் கொண்டால், இதய நோய் பாதிப்பு வராது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சாதாரணமாக வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில் சிக்கலிருக்கும். தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளாறை இன்னும் அதிகப்படுத்திவிடும். அதனால் உடலில் சூடு அதிகமாகிவிடும். வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சிக்குத் தயிரைவிட மோரைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

தயிரினால் ஏற்படும் நன்மைகள் குறித்து அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் மருத்துவ பல்கலைக்க ழகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில், ஆய்வுக் குழுவின் துணை தலைவர் ஜஸ்டின் ஆர்.பியுன்டியா கூறுகையில், ‘நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து தயிரை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது தனியாக எடுத்தாலும் சரி இதயம் ஆரோக்கியமாக இயங்கும் என ஆய்வில்  தெரியவந்தது’ என்றார்.

ஆய்வில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 30 முதல் 55 வயதுக்குள்பட்ட 50,000 பெண்களும், 40 முதல் 75 வயதுக்குள்பட்ட 18,000 ஆண்களும் பங்கேற்றனர். இந்த ஆய்வின் முடிவுகள் அமெ ரிக்க உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்கான மருத்துவ இதழில் வெளியாகின.

அதில் கூறப் பட்டுள்ள தாவது: ஆய்வில் பங்கேற்ற அனைவரும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு குழுவுக்கு, தினமும் தயிர் வழங்கப்பட்டது. அடுத்த குழுவுக்கு அவ்வப்போது மட்டும் தயிர் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தினமும் தயிர் சாப்பிட்ட குழுவினரிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது அவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 20 சதவீதம்  குறைவாக இருந்தது தெரியவந்தது.