ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்தால் 2 ஆண்டுகள் சிறை!

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்தால் 2 ஆண்டுகள் சிறை!

பைக், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தையடுத்து ஹெல்மெட் அணிவது இப்போது அதிகரித்து உள்ளது. அதேவேகத்தில் பல இடங்களில் தரமில்லாத ஹெல்மெட்டுகளின் விற்பனையும் அதிகரித்து அந்த ஹெல்மெட்டுகளில் போலி ஐ.எஸ்.ஐ முத்திரைகள் பதிக்கப்பட்டுள்ளன. தற்போது தரமான ஹெல் மெட்டின் விலை 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சாலை ஓர நடைபாதைகளில் விற்கப்படும் தரமற்ற ஹெல்மெட்டுகளின் விலை, ரூபாய் 300 முதல் 800 வரை விற்கப்படுகிறது. அதனாலேயே இப்படியான ஹெல்மட் தரமற்றது என்றாலும், ஹெல் மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் இந்த விலை குறைவான ஹெல்மெட்டு களை வாங்குகின்றனர். இந்நிலையில் வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, பாதுகாப்புக்கான ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்க வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வர மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட சட்ட முன்வடிவு மத்திய தரை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் வாகன ஓட்டிகள் உபயோகப்படுத்தும், தலைகவசம் ரூ.75 முதல் ரூ.150 வரை உள்ள விலையில் விற்கப்பட்டு வருகின்றன. இதை வாங்கி அணிவதன் காரணமாக விபத்தின் போது உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு ஐஎஸ்ஐ எனப்படும் இந்திய தர அங்கீகார நிறுவனம் அல்லாத ஹெல்மெட் விற்பது குற்றம் என கூறி சட்ட திருத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த சட்டம், அடுத்த வருடம் ஜனவரி 15 முதல் அமலாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால், ஹெல்மெட் தயாரிப்பாளர்களுக்கு இது குறித்த விதிமுறைகளுடன் புதிய அறிவிக்கையும் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு ஹெல்மெட்டின் எடை 1.2 கிலோ இருக்க வேண்டும். வாகன ஓட்டுநரின் தலையுடன் சேர்த்து முகத்தையும் பாதுகாக்கும்படி அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஐஎஸ் ஐ தரத்துடன் தயாரிக்கப்படுபவைக்கு மட்டும் விற்பனை அனுமதி அளிக்கப்படும் என்றும், தங்களிடம் உள்ள பழைய தயாரிப்புகளை காலி செய்யும்படியும், இதுபோன்ற தரமில்லாத தயாரிப்புகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஹெல்மெட் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் அடுத்த ஆண்டு அமலுக்கு வந்த பின், வாகன ஓட்டிகள் ஐஎஸ்ஐ முத்திரை உள்ள ஹெல்மெட் மட்டும் அணிய பணிக்கப் படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய சட்டத்தின்படி முதன்முறையாக குற்றம் செய்வபர்களுக்கும் எந்தவித எச்சரிக்கையும் அளிக்காமல் நேரடியாக வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் உயிரிழப்பு குறித்து, மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் வெளி யிட்டுள்ள புள்ளி விவரத்தில், இந்தியாவில் கடந்த 2016 ஆம் வருடம் 10,135 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ள னர். அவர்கள் தரமான ஹெல்மெட் அல்லது அதை அணியாமல் இருந்தமையால் அந்த விபத்துக் கள் நேர்ந்துள்ளன. 2017-ல் இந்த எண்ணிக்கை 35,975 என உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது என்ன ஐ.எஸ்.ஐ. தரம்?‘‘இந்தியாவில் தயாரிக்கப்படும் தரமான ஹெல்மெட்டுக்கு பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட் எனும் பி.ஐ.எஸ் நிறுவனம் தரச் சான்றிதழ் கொடுக்கிறது. அதன் கீழ் வரும் ஐ.எஸ் 4151 பிரிவில்தான் ஹெல்மெட்டின் தர விதிகள் உள்ளன. இதன்படி ஏ.பி.எஸ் என்று சொல்லப்படும் ஒருவகை உயர் தரமுடைய பிளாஸ்டிக் பொருளை மேல்பகுதியாகப் பயன்படுத்த வேண்டும். அதன் இடைப்பட்ட பகுதியில்… அதாவது, நடுப்பகுதியில் அடர்த்தியான தெர்மாகோல் இருக்க வேண்டும். இது தவிர, சின் ஸ்ட்ராப் எனப்படும் தாடை நாடா எவ்வளவு இருக்க வேண்டும், அதன் லாக் எப்படி இருக்க வேண்டும், தலைக்கு ஏற்ற மாதிரி என்ன வடிவத்தில் உட்புறம் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இந்த ஐ.எஸ் தர விதியில் இருக்கிறது. இந்த ஹெல்மெட்டுகளில் ஐ.எஸ்.ஐ முத்திரையும் கூடவே IS4151 என்ற குறியீடும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த ஐ.எஸ் விதிகளுக்கு மாறாக சிமென்ட், பேப்பர் கூழை இறுக வைத்து ஹெல்மெட் செய்து விலை மலிவாக சந்தையில் விற்கிறார்கள். பலத்த பாதிப்பைத் தாங்கக்கூடிய அடர்த்தியான தெர்மாகோலுக்கு பதிலாக தடிமன் இல்லாத தெர்மாகோல் பயன்படுத்துகிறார்கள். இவற்றை வாங்கி அணிந்தால் ஹெல்மெட் போட்டும் போடாத கதைதான்.

இத்தகைய ஹெல்மெட் நம் தலைக்கு பாதுகாப்பளிப்பதோடு மட்டும் இல்லாமல், தூசு, காற்று, மண், மழை உள்ளிட்டவைகளில் இருந்தும் நம் முகத்தை பாதுகாக்கும் கேடயமாக திகழ்கிறது.

எனவே போலியான ஹெல்மெட்டுகளை கண்டறிவது எப்படி :

ஹெல்மெட்டின், ஐ.எஸ்.ஐ குறியீட்டு எண் ’IS4151’ என்பதாகும். இது ஒவ்வொரு ஹெல்மெட்டிலும், ஐ.எஸ்.ஐ முத்திரைக்கு மேல் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஐ.எஸ்.ஐ முத்திரைக்குக் கீழ் ’CML-XXXXXXX’ அதாவது ஏழு இலக்கு லைசென்ஸ் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

மேலும், நாம் வாங்கும் ஹெல்மெட் தரமானது தானா என்பதைக் கண்டறிய www.bis.org.in என்ற இணையதளத்தில் ’Product Certification Online Information Application Licence Related’ என்பதை கிளிக் செய்யவும். அதில், நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் அங்கீகாரம் பெற்ற 162 தலைக்கவச தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியல், முகவரி, அங்கீகார உரிம எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். அதை வைத்து நம் ஹெல்மெட் உண்மையானதா போலியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஹெல்மெட் வாங்கிய பிறகு அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை இந்திய தர நிர்ணய ஆணையத்திற்கு (Authority of Indian Standards) தெரிவிக்க வேண்டும் அல்லது www.bis.org.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.

ஐ.எஸ்.ஐ., முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் மீது ரூ. 50,000 வரை அபராதமும், ஆறு மாத கடுங்காவல் தண்டனையும் வழங்க சட்டம் உள்ளது. [email protected] என் இமெயில் மூலமாகவோ, 044-22541442, 22541220, 22542365 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

அது மட்டுமின்றி ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீது பெறுவது அவசியம்.

ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டும், சுவாச கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் மிக மிக அரிது.

எனவே அனைவரும் தைரியமாக தரமான ஹெல்மெட்டுகளை அணியலாம்.

Related Posts

error: Content is protected !!