தொடர்கிறது இரு துருவங்கள் பேச்சு வார்த்தை! – AanthaiReporter.Com

தொடர்கிறது இரு துருவங்கள் பேச்சு வார்த்தை!

வடகொரியா – தென்கொரியா எல்லையில் பதற்றத்தை குறைப்பது குறித்து ராணுவ விலக்க பகுதியான பான்மூன்ஜோம் பகுதியில் வடகொரிய அதிகாரிகளும் தென்கொரிய அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

அமெரிக்கா உடன் ராணுவ பயிற்சியினை எந்த காரணத்தை முன்னிட்டும் தென்கொரியா துவங்க கூடாது என்று வடகொரியா வலியுறுத்தி வருகிறது. ராணுவ பயிற்சி மேற்கொள்ள மாட்டோம் என்று உறுதி அளிக்கும்படியும் வடகொரிய அதிகாரிகள் தென்கொரிய அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.
சிங்கப்பூரில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, வடகொரியா கேட்டுக் கொண்ட போது, அமெரிக்க அதிபர் ராணுவ பயிற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெளிவாக அறிவித்ததை வடகொரியா சுட்டிக் காட்டியது.

ராணுவ பயிற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று கூறியதன் நோக்கம், பொருள், உள்ளடக்கம் ஆகியவை குறித்து அறிந்துகொள்ள தென்கொரியா முயற்சி செய்கிறது. எனவே வடகொரியா அவசரப்படக் கூடாது என தென்கொரிய ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் பேச்சுவார்த்தைக்கு முன் வடகொரிய அதிபரும், தென்கொரியா அதிபரும் நடத்திய உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல் செய்வதில் தென்கொரியா கவனம் செலுத்தும் என தென்கொரிய ராணுவ அமைச்சகம் குறிப்பிட்டது.

கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த நாங்கள் உயர்ந்த பட்சம் உதவுவோம் என தென்கொரிய மேஜர் ஜெனரல் கே.டி. க்யூன் தெரிவித்தார். இந்த கருத்தை, பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசும் பொழுதும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு கொரியாக்களும் ராணுவ விஷயங்கள் குறித்து வழக்கமான அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தலாம். அதற்கென நேரடி தொலைபேசி வசதியையும் ஏற்படுத்தி கொள்ளலாம் என கொரிய ராணுவ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.