வங்கிகள் சேவையை நிறுத்தி விட்டு வழிப்பறி கொள்ளையர்களாகப் போகிறதா? – AanthaiReporter.Com

வங்கிகள் சேவையை நிறுத்தி விட்டு வழிப்பறி கொள்ளையர்களாகப் போகிறதா?

நம் நாட்டில் வங்கிகள் சேவை செய்வதை விட்டு விட்டாலும் மத்திய அரசின் நெருக்கடியால் வங்கிக் கணக்கில்தான் வாழ்க்கையை கழிக்க வேண்டிய போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் வங்கி வாடிக்யாளர்களுக்கு இதுவரை வழங்கிய சில இலவச சேவைகள் அனைத்தும் இனி கட்டண சேவைகளாக மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவல் பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

வரி துறையிடம் இருந்து எச்டிஎப்சி, ஆக்சிஸ், எஸ்பிஐ மற்றும் கோடாக் மகேந்திரா வங்கி என அனைத்து முக்கிய வங்கி களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த இலவச சேவை களுக்கான வரியை செலுத்த வேண்டும் என்று நோட்ஈஸ் அனுப்பப்பட்டுள்ளதாம். அதாவது, இதனால் வங்கிகள் ஏடிஎம், செக்புக் என இலவசமாக அளித்து வந்த சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இலவச பரிவர்த்தனைகளுக்கு இனி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அதோடு இல்லாமல் முந்தைய 5 வருடங்களுக்கு சேர்த்து வங்கிகள் வரி செலுத்த வேண்டும் என்றும் வரி துறை கூறியிருக்கிறதாம்.

அதன்படி வங்கிகள் இலவச சேவைகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்னும் பட்சத்தில் வரி தொகையானது ரூ.6,000 கோடி வரை இருக்கும். இது குறித்து வங்கி நிர்வாகிகள் மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாவிட்டால் அதாவது அரசு அரசு வரி செலுத்த வேண்டும் என்று கூறிவிட்டால் மக்களிடம் வரி வசூலிக்கப்படுமாம். வங்கிகள் சேமிப்பு / நடப்பு கணக்குகளில் (saving A/C, current A/C) இருந்து பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது, ஏடிஎம் இலவச பரிவர்த்தனை என அனைத்து இலவச சேவைகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தானியங்கிப் பணம் வழங்கும் எந்திரங்களில் ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் எடுப்பதும், செலுத்துவதும்கூட வங்கிக் கிளைகளில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுதானே தவிர, வாடிக்கையாளர்களுக்கு காட்டப்படும் சலுகை அல்ல. தானியங்கிப் பணம் வழங்கும் மையங்கள் அனைத்தும் மூடப்பட்டால், வாடிக்கையாளர்களைவிட வங்கிகள்தான் மிகக்கடுமையாக பாதிக்கப்படும். இதுதான் உண்மை நிலை. ஆனால், இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் காசோலைகளும், ஏடிஎம் கார்டுகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச சேவைகள் என அரசு நினைப்பது தவறு. அவற்றுக்காக சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கு அழுத்தம் கொடுப்பது அதைவிட தவறு. இது, வங்கிகளை வாழவைக்கும் வாடிக்கையாளர்களைக் கொள்ளையடிப்பதற்கு ஒப்பான செயலாகும் என்று பலரும் உரத்த குரலில் தங்கள் எதிர்ப்பை சொல்ல ஆரம்பித்துள்ளார்கள் .

ஹூம். பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கைமரத்தில்தான் குடி இருக்க வேண்டும் என்று சும்மாவா சொன்னார்கள்.