500 & 1000 ரூபாய் நோட்டு விவகாரம் ; மத்திய அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு என்ன தெரியுமா? – AanthaiReporter.Com

500 & 1000 ரூபாய் நோட்டு விவகாரம் ; மத்திய அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு என்ன தெரியுமா?

நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 8-ந் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். மக்கள் தங்கள் கைவசம் உள்ள அந்த ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்தலாம் என்றும், மேலும் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அப்போது அவர் கூறினார்.வங்கிகள், தபால் நிலையங்களில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கால அவகாசம் நீடிக்கப் படவில்லை. இதனால் நேற்று வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.ஆனால் செல்லாத நோட்டு களை மக்கள் தங்கள் வங்கி கணக்கில் டிசம்பர் 30-ந் தேதி வரை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்பிறகும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இருந்தால் அவற்றை மார்ச் மாதம் வரை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.

currency nov 25

அதே சமயம் செல்லாத 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அரசு ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பால் அங்காடி, நுகர்வோர் கூட்டுறவு கடைகள், தகன மேடை, ரெயில் டிக்கெட்டுகள், அரசு பஸ் போக்குவரத்து, விமான டிக்கெட், மின்சாரம், குடிநீர் வரி, சமையல் கியாஸ் சிலிண்டர், புராதன இடங்களுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுக்கு பயன்படுத்த விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த ‘கெடு’வும் நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால் இந்த ‘கெடு’வை வருகிற டிசம்பர் 15-ந் தேதி வரை நீடித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அரசு ஆஸ்பத்திரி, பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பால் அங்காடி போன்ற விதிவிலக்கு அளிக்கப்பட்ட இடங்களில் 500 ரூபாய் நோட்டுகளை செலுத்தலாம். ஆனால் 1,000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது.

* மத்திய, மாநில அரசு பள்ளிகள், நகரசபை, உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் ரூ.2,000 வரை கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம்.

* மத்திய, மாநில அரசின் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தலாம்.

* செல்போன்களுக்கு ரூ.500 வரை பிரீபெய்டு கட்டணம் செலுத்தலாம்.

* நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் ரூ.5,000 வரை பொருட்கள் வாங்க பயன் படுத்தலாம்.

* குடிநீர் வரி, மின்சார கட்டணம் மற்றும் பாக்கி தொகையை செலுத்தலாம். இது வீடுகளுக்கு மட்டும் பொருந்தும்.

* வெளிநாட்டினர் வாரத்துக்கு ரூ.5,000 ரூபாய் வரை வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொள்ளலாம். வெளிநாட்டு பணம் மாற்றப்படுவது பற்றிய விவரம் அவர்களுடைய பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்படும்.

மேற்கண்ட அம்சங்கள் அதில் இடம் பெற்று உள்ளன.

சுங்க கட்டணம் ரத்து நீடிப்பு

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதால், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த 11-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி 9-ந் தேதி அறிவித்தார்.

அதன்பிறகும் பணப்புழக்கம் சீரடையாததால் சுங்க கட்டண ரத்து சலுகை 14-ந் தேதி வரையும் அதன்பிறகு 18-ந் தேதி வரையும், பின்னர் 24-ந் தேதி வரையும் அடுத்தடுத்து மூன்று முறை நீடிக்கப்பட்டது. நீடிக்கப்பட்ட சுங்க கட்டண ரத்து சலுகை நேற்று இரவு 12 மணியுடன் முடிவடைய இருந்தது.

ஆனால் நிலைமை இன்னும் சீரடையாததால் சுங்க கட்டண ரத்து சலுகை வருகிற டிசம்பர் 2-ந் தேதி வரை நீடிக்கப்படுவதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று அறிவித்தார்.