டெல்லியில், 6 மாடி கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 43 பேர் உயிரிழப்பு!

டெல்லியில், 6 மாடி கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 43 பேர் உயிரிழப்பு!

டெல்லி ஜான்சி ராணி வணிகப் பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி எனும் தொழிற்சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்து உள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சூழ்ந்த புகை காரணமாக பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர். இந்நிலையில், தீ விபத்து தொடர்பாக தகவலறிந்து உடனடியாக அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறை, 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் போராடி தீயை அணைத்தனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் இருந்து 50 பேர் வரை மீட்கப்பட்டு, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்தில் இறந்தவர்களை பரிசோதனை செய்ததில், அனைவரும் கார்பன் மோனாக்சைட் என்ற கொடிய நச்சுவாயு தாக்கி இறந்ததாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து இந்த விபத்து குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விபத்து நடந்த கட்டிடத்துக்கு டெல்லி தீயணைப்பு துறையினரிடமிருந்து தடையின்மை சான்றிதழ் பெறப் படவில்லை என தெரியவந்துள்ளது. இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத் தாருக்கு தலா 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் டெல்லி அரசின் சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்து பற்றி தகவல் கிடைத்தவுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று நிலவரத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் இது மிகவும் வருத்தம் அளிக்கும் சம்பவம். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். காயமடைந்தோரின் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசு ஏற்கும் என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ராணி ஜான்சி சாலையில் உள்ள டில்லி அனுஜ் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்து கொடூரமானது. உயிரிழந்தோர் குடும்பத்தினரை நினைத்து மனம் வருந்துகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர் என மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அதேபோல் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 இழப்பீடாக வழங்கப்படும் என டெல்லி பாஜக அறிவித்துள்ளது.

டெல்லி தீ விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘டில்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகியுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அவசர தேவை கருதி அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!