கோலிவுட்டின் கேப்டன் – கலைத்துறையில் 40 ஆம் ஆண்டு பாராட்டுவிழா! – AanthaiReporter.Com

கோலிவுட்டின் கேப்டன் – கலைத்துறையில் 40 ஆம் ஆண்டு பாராட்டுவிழா!

கோலிவுட்டில் ‘கேப்டன்’ என்று பலதரப்பினராலும் குறிப்பிடப்படும் விஜயகாந்த் தமிழ் திரைப்படத்துரையில் எண்ட்ரி ஆகி 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை கொண்டாடும் வகையில் தேமுதிக சார்பில் ‘விஜயகாந்த் 40’ விழா சென்னையை அடுத்த படப்பையில் நாளை கொண்டாடப்பட உள்ளது.

மதுரை அருகே திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ல் பிறந்த விஜயராஜ், திரைத்துறை மீது ஏற்பட்ட ஈர்ப்பால் 10-ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். அப்பாவின் அரிசி ஆலையை கவனிக்கத் தொடங்கினார். ஆனாலும் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் உருத்திக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் மதுரையில் இருந்து 1978ல் சென்னைக்கு பயணமான விஜயராஜ். ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் விஜயகாந்த் ஆக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

அடுத்து நடித்த `சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் வாயிலாக தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திற்கும் பரவலாகத் தெரிய ஆரம்பித்தார் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984-ல் ‘மதுரை சூரன்’ முதல் ‘ஜனவரி 1’ படம் வரை 18 படங்களும், 1985-ம் ஆண்டில் மட்டும் ‘அலை ஓசை’யில் ஆரம்பித்து ‘நானே ராஜா நானே மந்திரி’ வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது.

1991-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படம்தான் விஜயகாந்துக்கு‘கேப்டன்’ என்ற அடைமொழியைத் தந்தது. 1999 முதல் 2004 வரை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்தார். அவர் இன்சார்ஜான போது பெரும் கடனில் சிக்கி தவித்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்த பெருமையும் விஜயகாந்தையே சாரும். 2001ல் சிறந்த இந்தியக் குடிமகன் விருதை விஜயகாந்துக்கு ஐ.நா. மனித உரிமைக் கமிஷன் வழங்கியது.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் 17 படங்களும், ராம நாரயணன் டைரக்ஷனில் 17 படங்களும் நடித்திருக்கிறார் விஜயகாந்த்.

இதனிடையே 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டில் தனது ரசிகர் மன்றங்களை இணைத்து தேமுதிகவை மதுரையில் முறைப்படி தொடங்கினார்.இந்த நிலையில் தமிழ் திரைப்படத்துரையில் விஜயகாந்த் காலடி எடுத்து வைத்து 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை கொண்டாடும் வகையில் தேமுதிக சார்பில் ‘விஜயகாந்த் 40’ விழா சென்னையை அடுத்த படப்பையில் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பிரமாண்ட விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாளை காலை 11 மணிக்கு தே.மு.தி.க கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.

முதலில் விஜயகாந்த் நடித்த படத்தில் இடம்பெற்ற பாடல்களின் கலைநிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் குறித்த கருத்தரங்கம், பட்டிமன்ற நிகழ்ச்சி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். மாலை 6 மணிக்குத் தமிழ்த் திரைப்பட உலகத்தினர் பங்கேற்கும் பாராட்டு விழா நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. பெரும்பாலான சினிமா பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் தேமுதிக மாவட்டச் செயலாளர் முருகேசன் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கலைத்துறையில் 40 வருடமாக யாரும் செய்யாத சாதனைகளை விஜயகாந்த் செய்துள்ளார். ஒரு சினிமா நடிகராக தான் சம்பாதித்ததில் ஒரு பெரும்பகுதியை எல்லோருக்கும் கொடுத்து உதவி இருக்கிறார். எத்தனையோ சிறந்த நடிகர்களையும், டைரக்டர்களையும் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் விஜயகாந்த். ஆனால், திரைத்துறையில் அவருக்கு ஒரு விழா எடுக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது. இதனால் ஒரு ரசிகனாக இருந்து நான் அவருக்கு விழா எடுக்கிறேன்”என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.