அண்ணா பேரைச் சொல்லி ராஜீவ் வழக்கில் சிறையிலிருபோர்களை விடுதலை செய்யலாமே! – ராமதாஸ்

அண்ணா பேரைச் சொல்லி ராஜீவ் வழக்கில் சிறையிலிருபோர்களை விடுதலை செய்யலாமே! – ராமதாஸ்

“தமிழக அரசு நினைத்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161 -ஆவது சட்டத்தைப் பயன்படுத்தி ஆளுனர் மூலம் அவர்களை விடுதலை செய்திருக்கலாம். ஆனால், அதற்கான முயற்சியில் தமிழக அரசு ஒருபோதும் ஈடுபடவில்லை.இதனிடையே ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு பெருந்தடையாக இருந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளில் பத்தாண்டு சிறைவாசத்தை நிறைவு செய்த அனைவரையும் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் விடுதலை செய்ய வேண்டும்” என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ramadoss aug 18

பாமக நிறுவனர் ராம்தாச் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழக சிறைகளில் இருந்து 1405 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னைம் உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது. ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு தடையாக இருந்த இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.சிறைகள் சீர்திருத்தப்பள்ளிகளாக இருக்க வேண்டுமே தவிர தண்டனைக் கூடங்களாக இருக்கக் கூடாது என்பது தான் மக்கள் நலனிலும், மனிதநேயத்திலும் அக்கறை கொண்டோரின் விருப்பமாகும். அந்த அடிப்படையில் தான் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுபவர்களை விடுதலை செய்வது தமிழகத்தில் வழக்கமாக இருந்து வந்தது.

2008 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதையொட்டி, 7 ஆண்டு சிறை வாசத்தை முடிவு செய்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 60 வயதுக்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் 5 ஆண்டு சிறைவாசத்தை நிறைவு செய்திருந்தாலே விடுதலை செய்யப்பட்டனர். அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு, அக்கட்சியின் அதிகாரமையமாக திகழ்ந்த சிலருக்கு வேண்டப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் கூடுதல் சலுகை காட்டியது என்றாலும், குடும்பத் தலைவன் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த பல குடும்பங்களை நிலைப்பாடுத்தி நிம்மதியான வாழ்க்கை வாழ இந்த விடுதலை முடிவு உதவியது என்பது உண்மை.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால், அண்ணா பிறந்தநாளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் வழக்கம் நிறுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் மட்டும் விதிவிலக்காக, கோவை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின் இன்று வரை எந்த கைதிக்கும் சிறை தண்டனைக் குறைப்பு வழங்கப்படவில்லை. கைதிகள் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடிக்கப்பட்டு விட்ட நிலையில், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை முடித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய இப்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தமிழகத்திலுள்ள 9 மத்திய சிறைகளில் 800-க்கும் அதிகமான ஆயுள் தண்டனை கைதிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இராஜிவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் 25 ஆண்டு தண்டனை அனுபவித்தும் இன்னும் சிறைக்கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் சிறை விதிக்கப்பட்ட பலர் 18 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகும் விடுதலை செய்யப்படவில்லை. ஆயுள் தண்டனை என்பது நடைமுறையில் 14 ஆண்டு சிறை தண்டனையாக இருக்கும் நிலையில், சிலரை மட்டும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அடைத்து வைப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யத் தயாராக இருப்பதாகவும், அதற்கான ஆலோசனை வழங்கும்படியும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது என்ற போதிலும், தமிழக அரசின் செயல்பாடுகளை பார்க்கும்போது அவர்களை விடுதலை செய்யும் எண்ணம் தமிழக அரசுக்கு உள்ளதா? என்ற ஐயம் எழுவதை தடுக்க முடியவில்லை. தமிழக அரசு நினைத்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161 -ஆவது சட்டத்தைப் பயன்படுத்தி ஆளுனர் மூலம் அவர்களை விடுதலை செய்திருக்கலாம். ஆனால், அதற்கான முயற்சியில் தமிழக அரசு ஒருபோதும் ஈடுபடவில்லை.

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவரது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். கடைசிக் காலத்திலாவது தந்தையின் அருகில் இருக்க வசதியாக தம்மை சிறை விடுப்பில் (பரோல்) அனுப்பும்படி பேரறிவாளன் விடுத்த வேண்டுகோள் தமிழக உள்துறை அமைச்சக கோப்புகளில் தூசு படிந்து கிடக்கிறது. மதுரை சிறையில் வாடும் இரவிச்சந்திரன் பல நோய்களால் பாதிக்கப்பட்டு, அவரது உடல் நாளுக்கு நாள் மெலிந்து வருகிறது. அவரும் மருத்துவம் பெறுவதற்காக தமக்கு சிறை விடுப்பு வழங்கும்படி விடுத்த கோரிக்கை குப்பையில் வீசப்பட்டிருக்கிறது. இவர்களை விடுதலை செய்வதற்குத் தான் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறதே தவிர சிறை விடுப்பில் அனுப்ப எந்தத் தடையும் இல்லை. ஆனால், அவர்களைச் பரோலில் அனுப்ப தமிழக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதை புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு பெருந்தடையாக இருந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளில் பத்தாண்டு சிறைவாசத்தை நிறைவு செய்த அனைவரையும் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் விடுதலை செய்ய வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும், மற்ற வழக்குகளில் தண்டனைக்காலம் முடிவடைந்த பிறகும் சிறைகளில் வாடும் கைதிகளையும் அரசியலமைப்புச் சட்டத்தின் 161 பிரிவைப் பயன்படுத்தி ஆளுனர் உத்தரவு மூலம் விடுதலை செய்ய வேண்டும். அதில் ஏதேனும் சட்ட சிக்கல் இருப்பதாக தமிழக அரசு கருதினால் அவர்களை நீண்ட சிறை விடுப்பில் அரசு அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்

error: Content is protected !!