2ஜி அலைக்கற்றை வழக்கில் டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு: சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு – AanthaiReporter.Com

2ஜி அலைக்கற்றை வழக்கில் டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு: சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது புகார் கூறப்பட்டது. அதாவது 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மொத்தம் மூன்று வழக்குகளை டெல்லி சிபிஐ நீதிமன்றம் விசாரித்துவருகிறது. முதலாவதாகத் தொடர்ந்த வழக்கில் 2011ஆம் ஆண்டு ஏப்ரலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் விதிகளை மீறித் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை மத்தியத் தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால் மத்திய அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ குறிப்பிட்டது.

இந்த வழக்கில் ரிலையன்ஸ் ஏடிஏஜி தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, கார்ப்பரேட் இடைத்தரகர் நீரா ராடியா உள்பட மொத்தம் 154 சிபிஐ தரப்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், வழக்கு தொடர்புடைய சுமார் 4,000 பக்கங்கள் நீதிமன்ற விசாரணையின்போது பதிவு செய்யப்பட்டன.

இரண்டாவது வழக்கில், எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர்கள் ரவி ருய்யா, அன்ஷுமன் ருய்யா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கெய்தான், அவரது கணவர் ஐ.பி.கெய்தான், எஸ்ஸார் குழும உத்திகள் திட்டமிடல் பிரிவு இயக்குநர் விகாஸ் சரஃப் ஆகியோர் மீதும் அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மூன்றாவதாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், பி. அமிர்தம் ஆகிய 10 பேர் மீதும் ஒன்பது தனியார் நிறுவனங்கள் மீதும் 2014, ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 2011 நவம்பர் 11ஆம் தேதி தொடங்கியது. தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ராஜா இருந்த காலத்தில் வழங்கப்பட்ட 122 உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இடையே, ப. சிதம்பரம் மீதும் வழக்குப் பதிய வேண்டும் எனக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது. இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை 2014 டிசம்பரில் தொடங்கியது. வழக்கின் இறுதி வாதம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முடிவடைந்தது. இதுவரை 6 முறை தீர்ப்பு தேதி குறித்து அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தீர்ப்பு தேதியை இன்று அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், 2ஜி அலைக்கற்றை வழக்கில் டிசம்பர் 21ம் தேதி காலை 10:00 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.